ஜப்பான் உயிரியல் பூங்காவில் பயங்கரம்: ஊழியரை கடித்து கொன்றது, வெள்ளைப்புலி

ஜப்பான் உயிரியல் பூங்காவில், ஊழியர் ஒருவரை வெள்ளைப்புலி கடித்து கொன்றது.
ஜப்பான் உயிரியல் பூங்காவில் பயங்கரம்: ஊழியரை கடித்து கொன்றது, வெள்ளைப்புலி
Published on

டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் ககோஷிமா நகரம் உள்ளது. அந்த நகரத்தில் ஹிரகவா உயிரியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் மிகவும் அபூர்வமான 4 வெள்ளைப் புலிகள் உள்ளன.

இந்தப் புலிகளில் ஒன்று, தன்னைப் பார்த்து பராமரித்து வந்த ஊழியரையே கழுத்தில் கடித்துக் குதறி விட்டது.

அவரது அலறலைத் தொடர்ந்து உடனடியாக மற்ற ஊழியர்கள், அங்கு விரைந்து அவரை ரத்த வெள்ளத்தில் மீட்டனர். உடனடியாக அவர் அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த வெள்ளைப்புலிக்கு மயக்க மருந்து கொடுத்து, மயங்க வைத்தனர். அதன்பின்னர் அங்கு போலீஸ் படையினர் வந்து நடந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிந்தனர்.

பலியான ஊழியர் பெயர் வெளியிடப்படவில்லை. அவர் 40 வயதானவர் என்று மட்டும் தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு கேம்பிரிட்ஜ்ஷயர் உயிரியல் பூங்காவில் பணியாளர் ஒருவரை புலி ஒன்று கடித்துக்கொன்று விட்டது. ரஷியாவில் காலினின்கிராட் நகரில் உள்ள பூங்காவில் புலி தாக்கியும் பணியாளர் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com