

இந்த கோவில் கட்டப்பட்ட காலத்திலிருந்தே சீனாவும், இரு கொரிய நாடுகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. போரின்போது தங்கள் நாட்டு மக்களை கொன்று குவித்தவர்களை தியாகிகளாக ஜப்பான் கருதுவதாகவும், தங்கள் மீதான அடக்குமுறையின் நினைவுச்சின்னமாக யாசுகுனி கோவிலை கருதுவதாகவும் சீனா மற்றும் கொரிய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் இந்த கோவிலுக்கு ஜப்பானின் அரசியல் தலைவர்கள் செல்வதை அந்த நாடுகள் வன்மையாக கண்டித்து வருகின்றன.
இந்த நிலையில் ஜப்பான் ராணுவ மந்திரி நோபுவோ கிஷி நேற்று யாசுகுனி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். 2016-ம் ஆண்டுக்கு பின்னர் ஜப்பான் ராணுவ மந்திரி ஒருவர் இந்த கோவிலுக்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.
வழிபாட்டுக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் போரில் இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு மரியாதை செலுத்துவது ஒவ்வொரு நாட்டிலும் இயற்கையானது. நான் எனது மரியாதையை வெளிப்படுத்தினேன். நாட்டிற்காக போராடி உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன் என கூறினார்.