செயற்கை கையுடன் வயலின் வாசித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஜப்பான் இசை கலைஞர்

ஜப்பானை சேர்ந்த மனாமி இடோ, சிறுவயது முதலே வயலின் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
செயற்கை கையுடன் வயலின் வாசித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஜப்பான் இசை கலைஞர்
மனாமி
Published on: 

டோக்கியோ,

செயற்கை கையுடன் வயலின் வாசித்து உலக சாதனை படைத்த ஜப்பானிய பெண் கலைஞர் மனாமி இடோ (வயது 42), 2027-ஆம் ஆண்டிற்கான கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக இடம்பிடித்துள்ளார்.

சாலை விபத்து

ஜப்பானை சேர்ந்த மனாமி இடோ, சிறுவயது முதலே வயலின் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஆனால், கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் இவர் தனது வலது கையை இழந்தார். இதனால் தனது இசை வாழ்க்கை முற்றிலுமாக முடிந்துவிட்டதாகவே அவர் கருதினார்.

செயற்கை கையுடன் பயிற்சி

இருப்பினும், மனம் தளராத மனாமி இடோ, தனக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செயற்கை கையை பொருத்திக்கொண்டு மீண்டும் வயலின் வாசிக்க தீவிர பயிற்சி மேற்கொண்டார். தொடர் முயற்சியின் பலனாக, கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் பார்வையாளர்கள் முன்னிலையில் வயலின் வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

கின்னஸ் உலக சாதனை

இவரது இந்த தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியை பாராட்டி, "முழுமையான செயற்கை கையுடன் வயலின் வாசித்த முதல் கலைஞர்" என்ற பெருமையுடன் 2027-ஆம் ஆண்டிற்கான கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

தாயின் வார்த்தையால் பிறந்த வைராக்கியம்

தனது சாதனை பயணம் குறித்து மனாமி இடோ நெகிழ்ச்சியுடன் கூறுகையில், "விபத்தில் வலது கையை இழந்த பிறகு, சாப்பிடும் குச்சிகளை கூட பிடிக்க முடியாமல் தவித்தேன். இதை பார்த்த என் தாயார், 'நீ இனி வயலின் வாசிக்க முடியாது' என்று வேதனையுடன் கூறினார். ஆனால், ஒரு நாள் எனக்காக வயலின் வாசித்து காட்டுமாறு என் தாயார் முன்பு கேட்டிருந்தது எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தாலேயே மீண்டும் வயலின் வாசிக்க தொடங்கினேன்.

தன்னம்பிக்கை

ஆரம்பத்தில் என்னை பிறர் பார்ப்பதை நான் விரும்பவில்லை, பலவீனமாக உணர்ந்தேன். பொதுமேடையில் வாசிக்கும் தன்னம்பிக்கையை பெற எனக்கு 3 ஆண்டுகள் ஆனது. எனக்காக செயற்கைக் கையை உருவாக்கி தந்தவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாகவே பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்த தொடங்கினேன்" என்றார்.

பாராலிம்பி நீச்சல் வீராங்கனை

வயலின் கலைஞராக மட்டுமின்றி, ஜப்பானில் செயற்கை கையுடன் பணியாற்றிய முதல் செவிலியர் என்ற பெருமையையும், பாராலிம்பி நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை என்ற சிறப்பையும் மனாமி இடோ பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X