நிலவின் வடக்கு பகுதியில் தரையிறங்கும் ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம்


நிலவின் வடக்கு பகுதியில் தரையிறங்கும் ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம்
x

Image Courtesy : @ispace_inc

‘ரெசிலியன்ஸ்’ விண்கலம் தற்போது நிலவின் மேற்பரப்பில் இருந்து 100 கி.மீ. உயரத்தில் சுற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ,

இரவு வானத்தை பிரகாசமாக்கும் பூமியின் துணைக் கோளான நிலவு, வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த வானியல் ஆய்வாளர்களால் இடைவிடாது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொலைநோக்கியில் தொடங்கிய இந்த ஆய்வு பயணம், தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் மனிதர்கள் நேரடியாக நிலவிற்கு சென்று கால் பதிக்கும் அளவிற்கு முன்னேறியது.

இருப்பினும் நிலவின் மீதான மனித இனத்தின் பேரார்வம் இன்று வரை தணியவில்லை. நிலவில் கால் பதித்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்ட்ராங், "ஒரு மனிதனுக்கு இது மிகச்சிறிய காலடி, மனித இனத்திற்கு இது ஒரு மிகப்பெரிய பாய்ச்சல்" என்றார். அவர் கூறியபடி, விண்வெளி ஆய்வில் மனித இனம் இன்று அளப்பரிய வளர்ச்சிகளை கண்டு வருகிறது.

இதுவரை அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகள் அனுப்பிய விண்கலங்களின் ரோவர்கள் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளன. இதனிடையே, பல்வேறு தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் நிலவை ஆய்வு செய்வதற்கான விண்கலங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், ஜப்பானின் டோக்கியோ நகரை சேர்ந்த ஐஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம், நிலவை ஆய்வு செய்வதற்காக 'ரெசிலியன்ஸ்'(Resilience) என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும், தற்போது நிலவின் மேற்பரப்பில் இருந்து 100 கி.மீ. உயரத்தில் விண்கலம் சுற்றி வருவதாகவும் ஐஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த விண்கலம் மணிக்கு சுமார் 5,800 கி.மீ. வேகத்தில் நிலவை சுற்றி வருகிறது. இந்த விண்கலம் இன்று நள்ளிரவு நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலவில் தரையிறங்கிய பிறகு இந்த விண்கலத்தின் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளது. முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்பேஸ் நிறுவனம் நிலவுக்கு அனுப்பிய விண்கலம், தரையிறங்கும்போது நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story