

வாஷிங்டன்,
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) மீண்டும் பொறுப்பேற்ற ஜென்சன் ஹுவாங், தனது பல ஆண்டுகால அடையாளமாக இருந்த கருப்பு லெதர் ஜாக்கெட்டை தவிர்த்துவிட்டு புதிய தோற்றத்தில் அலுவலகத்திற்குத் திரும்பியிருப்பது தொழில்நுட்ப உலகில் பேசுபொருளாகியுள்ளது.
நிறுவன ஊழியர்கள் மற்றும் சீன உளவாளி என அமெரிக்க உளவுத்துறையால் சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக எழுந்த சர்ச்சைகள் காரணமாக ஜென்சன் ஹுவாங் கடந்த 12-ம் தேதி அன்று தனது சிஇஓ பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, 11 நாட்களுக்குப் பிறகு கடந்த (திங்கட்கிழமை) அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சாண்டா கிளாராவில் உள்ள என்விடியா தலைமையகத்திற்கு மீண்டும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) மீண்டும் பொறுப்பேற்றார்.
வழக்கமாகத் தனது அடையாளமான கருப்பு லெதர் ஜாக்கெட்டுடன் வலம் வரும் ஹுவாங், இம்முறை எளிமையான நேவி ப்ளூ காட்டன் ஜாக்கெட் அணிந்து வந்தார். இது குறித்து ஊழியர்களிடம் பேசிய அவர், தனது செயல்களுக்கு மன்னிப்பு கேட்டதோடு, "இரண்டாவது முறையாக இன்னும் சிறந்த சிஇஓ-வாகச் செயல்படுவேன்" என்றும் உறுதியளித்தார்.
சர்ச்சைகளுக்குப் பிறகு பழைய கறைபடிந்த பிம்பத்தைத் தவிர்த்து, ஒரு புதிய தொடக்கத்தைக் காட்டவே அவர் லெதர் ஜாக்கெட்டைக் கைவிட்டதாகக் கருதப்படுகிறது. முன்பு 'கலகக்காரன்' மற்றும் 'தனித்துவமான தலைவர்' என்ற பிம்பத்தைக் கொடுத்த லெதர் ஜாக்கெட், சர்ச்சைகளுக்குப் பிறகு பொறுப்பற்ற தன்மையின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது.
அதற்குப் பதிலாக எளிமையான, அடக்கமான மற்றும் அணுகக்கூடிய தோற்றத்தைத் தர காட்டன் ஜாக்கெட்டைத் தேர்ந்தெடுத்ததாக பேஷன் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஹுவாங் விலங்குத் தோலால் ஆன லெதர் ஜாக்கெட்டுகளைக் கைவிட்டு, தாவர அடிப்படையிலான 'வீகன் லெதர்' ஜாக்கெட்டுகளுக்கு மாற வேண்டும் என்று விலங்கு நல அமைப்பான பீட்டா ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.