

புதுடெல்லி,
டெல்லியை தலைமையிடமாக கொண்ட ஒரு அமைப்பு சார்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. 1989-ம் ஆண்டு சீனாவில் தியான்மென் சதுக்க போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவர் போராட்ட தலைவர் சுவோ பெங்சுவோ, இணையவழியில் பேசினார்.
இவர், தற்போது அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் பேசியதாவது:-
சீன அதிபர் ஜின்பிங், ஹிட்லர் போன்றவர். இருவரது குணாதிசயங்களும் ஒரே மாதிரியானவை. ஹிட்லர் போல், ஜின்பிங் தலைமையிலான சீன கம்யூனிஸ்டு கட்சி, உலக அமைதிக்கே அச்சுறுத்தலானது. சீனா தனது குடிமக்கள் மீதும், திபெத், துர்கெஸ்தான், மங்கோலியா ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மீதும் நடத்தும் மனித உரிமை மீறல்களை எல்லோரும் உணர வேண்டும்.
சீன செயலிகளுக்கு தடை விதித்ததற்காக இந்தியாவை பாராட்டுகிறேன். இந்தியா போன்ற வலிமையான அரசு, வலிமையான நடவடிக்கைகளை எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. சீனாவை எல்லா வழிகளிலும் எதிர்ப்பது மிகவும் முக்கியம். எல்லையை விரிவுபடுத்தும் ஜின்பிங்கின் கம்யூனிஸ்டு கட்சியை, இந்தியாவை பின்பற்றி எல்லா நாடுகளும் எதிர்க்க வேண்டும்.
கடந்த 1989-ம் ஆண்டு நடந்த தியான்மென் சதுக்க போராட்டம், உலகத்தை தட்டி எழுப்பி இருக்க வேண்டும். அப்போது, சொந்த மக்கள் மீதே ராணுவ டாங்கிகளும், துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டன.
சொந்த மக்களையே கொடூரமாக கொலை செய்த நிர்வாகம், பின்னாளில் ஒட்டுமொத்த உலகத்துக்கே அச்சுறுத்தலாக மாறும் என்று உலகம் புரிந்து கொண்டிருக்க வேண்டாமா? உலகத்தையே அடிமை ஆக்க தொழில்நுட்பத்தையும், கடன் கொடுப்பதையும் சீனா பயன்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.