

ஜெனீவா,
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், முதல் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் ஜோ பைடன், ஜூன் 16 ஆம் தேதி(நாளை) ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து ஒரு உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகருக்கு அருகே ஏரிக்கரையில் அமைந்துள்ள 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அழகிய மாளிகையில் இந்த உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
இந்த உச்சிமாநாட்டில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் அண்டை நாடுகளில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அணு ஆயுதங்களை குறைப்பது தொடர்பாக இருவரும் விவாதிக்க உள்ளனர். ரஷ்யாவில் நிகழ்ந்து வரும் மனித உரிமை மீறல்கள், எதிர்கட்சித் தலைவர்கள் மீதான அடக்குமுறைகள், சிறைதண்டனைகள் பற்றியும் இந்த சந்திப்பில் ஜோ பைடன் கேள்வி எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பாக கடந்த 1985 ஆம் ஆண்டு பனிப்போர் காலத்தில், அன்றைய சோவியத் ரஷ்யாவின் அதிபர் கார்பச்சேவ்வுடன், அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் ஜெனீவா நகரில் முதல் முறையாக உச்சிமாநாட்டை நடத்தினார். அதனை தொடர்ந்து ஜெனீவா நகரில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் அதிபர் ஜோ பைடன், தற்போது விமானம் மூலம் ஜெனீவா நகருக்கு சென்றடைந்துள்ளார்.