ஜோ பைடன் உத்தரவு: பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்தது அமெரிக்கா

புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் உத்தரவின்படி பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது.
ஜோ பைடன் உத்தரவு: பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்தது அமெரிக்கா
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்பது வழக்கம்.

அந்த வகையில் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் நேற்று பதவி ஏற்று கொண்டார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்று கொண்டார்.

ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்ற முதல் நாளிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட உள்ளார் என வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் ஜென் சகி கூறினார்.

ஜென் சகி கூறும்பொழுது, குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளில் இருந்து மக்கள் வருவதற்கான தடையை நீக்குதல், பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் இணைதல், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அடுத்த 100 நாட்களுக்கு மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிதல், மக்களுக்கு பொருளாதார உதவி, ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் தவறாக எடுக்கப்பட்ட முடிவுகளை திரும்ப பெறுதல் போன்றவை அந்த உத்தரவுகளில் உள்ளன.

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா டிரம்ப் நிர்வாகத்தில் வெளியேறியது. நிதியுதவியையும் நிறுத்தியது. அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைந்து நிதியுதவி வழங்கும். உலக சுகாதார கூட்டத்திலும் அமெரிக்கா வருங்காலத்தில் பங்கேற்கும்.

பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா ட்ரம்ப் நிர்வாகத்தில் வெளியேறியது. அந்த உத்தரவு மறு ஆய்வு செய்யப்படும். புதிய வேலைவாய்புகள், பருவநிலை மாற்ற சிக்கல்களை தீர்க்கும் நடவடிக்கைகள் போன்றவை எடுக்கப்படும்.

கறுப்பினத்தவர்கள், லாட்னோ, பூர்வீக அமெரிக்கர்கள், ஆசிய அமெரிக்கர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், எல்ஜிபிடி பிரிவினர், மதச்சிறுபான்மையினர் ஆகியோர் அனைவரையும் சமமாக நடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் அகதிகள் நுழையாத வகையில் ட்ரம்ப் ஆட்சியில் சுவர் எழுப்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியுதவி உடனடியாக ரத்து செய்யப்படும் என ஜென் சகி கூறியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற பின்னர் அதிபரின் அலுவலகமான ஓவல் அலுவலகத்தில் ஜோ பைடன் தனது பணியை தொடங்கினார். அவர் பதவியேற்ற முதல் நாளிலேயே பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.

அவற்றில், பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான உத்தரவை ஜோ பைடன் பிறப்பித்து உள்ளார். இதன்படி, பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com