

நைரோபி,
கென்யா கடற்படையுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இந்திய கடற்படையின் 'ஐஎன்எஸ் தர்காஷ்' போர்க்கப்பல், தனது மொம்பாசா துறைமுகப் பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிநவீன ஏவுகணை போர்க்கப்பல் 'ஐஎன்எஸ் தர்காஷ்'. இந்த கப்பல் ஆப்பிரிக்க நாடுகளுடனான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு கடல்சார் பயணங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கென்யா நாட்டில் உள்ள மொம்பாசா துறைமுகத்திற்கு ஐஎன்எஸ் தர்காஷ் போர்க்கப்பல் 4 நாள் நல்லெண்ணப் பயணமாக சென்றது.
துறைமுகத்தை சென்றடைந்த இந்திய போர்க்கப்பலுக்கு கென்ய கடற்படை அதிகாரிகள் மற்றும் அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, கப்பலில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கென்யாவுக்கான இந்திய தூதர் மற்றும் கென்ய கடற்படையின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த பயணத்தின் போது, இரு நாட்டு கடற்படை வீரர்களும் கடல்சார் பாதுகாப்பு, தொழில்நுட்பங்கள் மற்றும் தங்களின் செயல்பாட்டு அனுபவங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர். மேலும், மொம்பாசா பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இந்திய போர்க்கப்பலை நேரில் பார்வையிடவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தனது 4 நாள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட 'ஐஎன்எஸ் தர்காஷ்' போர்க்கப்பல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் கென்ய கடற்படை கப்பலான 'ஜசிரி'-யுடன் இணைந்து பல்வேறு கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டது. அதன்பின் மொம்பாசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தவும், இரு நாட்டு ராணுவ உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் இந்த பயணம் பெரிதும் உதவியாக இருக்கும் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.