

கராச்சி,
பாகிஸ்தான் நாட்டில் தனியார் தொலைக்காட்சி சேனலில் மூத்த தயாரிப்பாளராக ஆதர் மதீன் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கராச்சி நகரில் தனது குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு, காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார்.
இந்த நிலையில், வரும் வழியில் நசீமாபாத் பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதமேந்திய நபர்கள் மற்றொரு நபரிடம் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். காரை ஓட்டி வந்த மதீன், இதனை கண்டவுடன் கொள்ளையை தடுக்கும் வகையில், தனது காரை மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளார்.
இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நபர் மதீனின் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். 3 முறை சுட்டதில் ஒரு குண்டு மதீனை துளைத்துள்ளது. இந்த சம்பவத்தில் அந்த இடத்திலேயே மதீன் உயிரிழந்து உள்ளார்.
இதனை கண்ட அவர்கள் சாலையின் மறுபுறத்திற்கு நடந்து சென்று, மற்றொரு மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டு அதில் ஏறி தப்பி சென்றுள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.