ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர் சுட்டு கொலை: கடந்த 2 மாதங்களில் 6வது நபர்

ஆப்கானிஸ்தான் நாட்டில் புது வருடத்தின் முதல் நாளிலேயே மர்ம நபர்களால் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர் சுட்டு கொலை: கடந்த 2 மாதங்களில் 6வது நபர்
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தில் பெரோஸ் கோ நகரில் தரா இ தைமூர் கிராமத்தில் வசித்து வந்த சமூக ஆர்வலர் மற்றும் பத்திரிகையாளராக பணியாற்றிய பிஸ்மில்லா அடில் ஐமக் என்பவரை ஆயுதமேந்திய மர்ம நபர்கள் இன்று சுட்டு கொன்றனர்.

அவர், சடா இ கோர் என்ற உள்ளூர் வானொலி நிலையத்தின் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். அந்நாட்டில், கடந்த 2 மாதங்களில் படுகொலை செய்யப்பட்ட 6வது பத்திரிகையாளர் ஐமக் ஆவார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 21ந்தேதி, பத்திரிகையாளராகவும் மற்றும் கஜினி மாகாண பத்திரிகையாளர்கள் அமைப்பின் தலைவராகவும் இருந்து வந்த ரகமதுல்லா நிக்ஜாத் என்பவர் ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இதேபோன்று, கடந்த நவம்பர் 7ந்தேதியில் இருந்து பல்வேறு சம்பவங்களில், டோலோ நியூஸ் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் செய்தி வழங்குனரான யாமா சியாவாஷ், ரேடியோ ஆசாதி நிருபர் எலியாஸ் டேயீ, தொலைக்காட்சி தொகுப்பாளர் மலாலா மைவாண்ட் மற்றும் ஏரியானா நியூஸ் நிறுவனத்தின் செய்தி வழங்குனர் பர்தீன் ஆமினி ஆகியோர் கொல்லப்பட்டனர்.

அந்நாட்டில் பத்திரிகையாளர்கள் பலர் தாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தில் தீவிர விசாரணை நடத்த கோரி கடந்த ஆண்டு நவம்பரில் பத்திரிகையாளர்கள் பலர் அரசை வலியுறுத்தினர். ஊடக பணியாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை பற்றிய விசாரணையில் குறைவாக கவனம் செலுத்துவது நாட்டில் ஊடக சுதந்திரத்திற்கு கடுமையாக தீங்கு விளைவிக்கும் என்று பத்திரிகையாளர்கள் கூறினர்.

இந்த நிலையில், புது வருடத்தின் முதல் நாளிலேயே ஆயுதமேந்திய மர்ம நபர்களால் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com