அமெரிக்காவில் பொது போக்குவரத்தில் முக கவசம் கட்டாயம் உத்தரவை ரத்து செய்த நீதிபதி

அமெரிக்காவில் பொது போக்குவரத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவை புளோரிடா நீதிபதி ரத்து செய்துள்ளார்.
அமெரிக்காவில் பொது போக்குவரத்தில் முக கவசம் கட்டாயம் உத்தரவை ரத்து செய்த நீதிபதி
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் அதிகரித்தே காணப்படுகிறது. அந்நாட்டின் பல நகரங்களில் கொரோனாவின் பிஏ.2 வகையானது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வகை தொற்றானது தீவிர பரவல் தன்மை கொண்டபோதிலும், மருத்துவமனையில் சேர்வோரின் எண்ணிக்கையும் ஒருபுறம் குறைந்து வருகிறது.

எனினும், சுகாதார நலனை முன்னிட்டு முக கவசம் அணிதலை பைடன் அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் நீட்டித்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்வு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேருவது மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு முக கவசம் அணிவது தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது என அறிவித்தது.

இந்த நடவடிக்கையின்படி, அமெரிக்காவில் பொது போக்குவரத்து பயன்படுத்தும் மக்கள் முக கவசம் அணிவது வருகிற மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதன்படி, பொதுமக்கள் எந்த வகையிலான போக்குவரத்து (எடுத்துக்காட்டாக, விமானங்கள், ரெயில்கள், புறவழி பாதைகள், பேருந்துகள், டாக்சிகள், படகுகள், கப்பல்கள், டிராலிகள் மற்றும் கேபிள் கார்கள்) பயன்படுத்தினாலும் அவர்கள் அமெரிக்காவுக்கு வரும்போதோ அல்லது உள்நாட்டுக்குள்ளேயே பயணிக்கும்போதோ வாய் மற்றும் மூக்கு ஆகியவற்றை மூடியிருக்கும்படியாக முக கவசம் அணிவது அவசியம் என்று தெரிவித்திருந்தது.

இந்த சூழலில், புளோரிடா மாகாண பெடரல் நீதிமன்ற நீதிபதி ஒருவர், விமானங்கள் மற்றும் பொது போக்குவரத்துகளில் முக கவசங்கள் அணிவது கட்டாயம் என்ற உத்தரவை தள்ளுபடி செய்துள்ளார். இது அமெரிக்க சுகாதார அதிகாரிகளின் அதிகாரத்திற்கு உட்படாதது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

இதனால், விமான நிறுவனங்கள் மற்றும் பிற போக்குவரத்து துறையினர், முக கவசம் அணியும் நடைமுறையை மேற்கொள்வது அவர்களது சொந்த முடிவுக்கு விடப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, பல்வேறு பெரிய விமான நிறுவனங்களும் இந்த உத்தரவை பின்பற்றி முக கவசங்களை அவரவரது விருப்பப்படி அணிந்து கொள்ளலாம் என ஒலிபெருக்கி வழியே அறிவித்தது.

இதனை கேட்ட விமான நிலையத்தில் கூடியிருந்த பயணிகளில் சிலர் மகிழ்ச்சியில் ஆரவாரமும் செய்துள்ளனர். இதேபோன்று, ஹூஸ்டன் மற்றும் டல்லாஸ் விமான நிலையங்களில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என்று போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் நேற்றிரவு அறிவிப்பு வெளியிட்டது.

உலகின் 5வது மிக அதிக பயணிகள் போக்குவரத்து நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையமும் முக கவசம் கட்டாய உத்தரவை கைவிட்டு உள்ளது. எனினும், போக்குவரத்தின்போது முக கவசம் அணியும் நடைமுறையை அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தொடர்ந்து பரிந்துரைத்து வருகிறது. அது நல்ல அறிவுறுத்தல் என்றே நான் நினைக்கிறேன் என லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தின் செய்தி தொடர்பு அதிகாரி ஹீத் மோன்ட்கோமெரி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com