காபூல் குண்டுவெடிப்பு: மீட்பு நடவடிக்கையை இறுதிவரை தொடர்வதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது - போரிஸ் ஜான்சன்

காபூலில் நடந்த தாக்குதல், அங்கு மீட்பு நடவடிக்கையை இறுதிவரை தொடர வேண்டியதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
காபூல் குண்டுவெடிப்பு: மீட்பு நடவடிக்கையை இறுதிவரை தொடர்வதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது - போரிஸ் ஜான்சன்
Published on

லண்டன்,

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக அறிவித்ததில் இருந்து, அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், தலைநகர் காபூல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் தலீபான்களின் ஆட்சிக்கு பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள் பலர் அந்த நாட்டில் இருந்து தப்பிச் செல்ல முயன்று வருகின்றனர். இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாட்டு அரசுகள், விமானம் மூலமாக தங்கள் நாட்டு மக்களையும், தகுதி உள்ள ஆப்கான் மக்களையும் பத்திரமாக மீட்டு வருகின்றனர். அவ்வாறு காபூல் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய மீட்பு விமானம் ஒன்றில் அங்குள்ள மக்கள் சிலர் ஆபத்தான முறையில் பயணம் செய்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

மேலும் காபூல் விமான நிலைய நுழைவு வாயிலில் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக தினந்தோறும் ஆப்கானிய மக்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் காபூல் விமான நிலையத்திற்கு அருகே நேற்று இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்பில் அமெரிக்க படைவீரர்கள், ஆப்கான் மக்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பெற்கவில்லை. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.நா. சபையும், பல்வேறு உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காபூலில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், அங்கு மீட்பு நடவடிக்கையை இறுதிவரை தொடர வேண்டியதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். தகுதியுள்ளவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், மேலும் தங்களால் முடிந்தவரை விரைவாக மக்களை வெளியேற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com