நேரடி விவாதம்: டிரம்பை பின்னுக்கு தள்ளிய கமலா ஹாரிஸ் - கருத்துக்கணிப்பில் தகவல்

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக, ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் இருவரும் பங்கேற்ற நேரடி விவாத நிகழ்ச்சி பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியாவில் இந்திய நேரப்படி நேற்று காலை நடைபெற்றது.

இதில் பொருளாதாரம், குடியேற்றம், ரஷியா - உக்ரைன் போர், இஸ்ரேல் - காசா போர், நிர்வாகம், கருக்கலைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து காரசாரமாக விவாதித்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் சிரித்த முகத்துடனும், டிரம்ப் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமலும் இருந்தனர். விவாதத்தில் கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேரடி விவாதத்தில் வெற்றி பெற்றது யார் என்பது குறித்து அமெரிக்க ஊடகங்கள் கருத்துக்கணிப்பு நடத்தின. இதில் டிரம்பை, கமலா ஹாரிஸ் பின்னுக்கு தள்ளினார். இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிசுக்கு 63 சதவீத பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். டிரம்புக்கு 37 சதவீத பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:-

சி.என்.என்: டொனால்டு டிரம்பை விட துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டார் என்பதை அமெரிக்க வாக்காளர்கள் பரவலாக ஒப்புக் கொள்கிறார்கள்.

வாஷிங்டன் போஸ்ட்: டிரம்புக்கு எதிராக கமலா ஹாரிஸ் கூர்மையான கருத்துகனை முன்வைத்தார். டிரம்ப் பெரும்பாலும் உண்மைகளில் இருந்து விலகிச் சென்றார்.

நியூயார்க் டைம்ஸ்: கமலா ஹாரிஸ் தெளிவான செய்தியை வழங்கினார். அதே நேரத்தில் டிரம்ப் கோபமாகவும் தற்காப்புடனும் தோன்றினார்.

எம்.எஸ்.என்.பி.சி: கமலா ஹாரிஸ் விவாதம் முழுவதும் நிதானமாகவும், தகுதியுடனும் இருந்தார். டிரம்ப் விரக்தியடைந்து காணப்பட்டது தெளிவாக தெரிந்தது.

இதன்மூலம் விவாத நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com