கிரீஸ் மந்திரியுடன் கனிமொழி எம்.பி. குழுவினர் சந்திப்பு; 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து எடுத்துரைத்தனர்

கிரீஸ் அரசு நம்முடன் நிற்கிறது என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
கிரீஸ் மந்திரியுடன் கனிமொழி எம்.பி. குழுவினர் சந்திப்பு; 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து எடுத்துரைத்தனர்
Published on

ஏதென்ஸ்,

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகுக்கு அம்பலப்படுத்தவும், 'ஆபரேஷன் சிந்தூர்' போன்ற இந்தியாவின் தற்காப்பு உரிமையை எடுத்துரைக்கவும் சர்வதேச நாடுகளுக்கு இந்திய பிரதிநிதிகள் சென்றுள்ளனர்.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள 7 அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில், தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான குழுவும் ஒன்று. இந்த குழுவினர் ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணமாகி உள்ளனர்.

இதில் ரஷியா, சுலோவேனியா உள்ளிட்ட நாடுகளில் தங்கள் பணியை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் கிரீஸ் நாட்டை அடைந்தனர். தலைநகர் ஏதென்ஸ் நகரில் நேற்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை துணை மந்திரி டாசோஸ் சட்ஜிவாஸ்லியோவை சந்தித்து பேசினர்.

மேலும் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு தொடர்பான நாடாளுமன்றக் குழு மற்றும் கிரீஸ்-இந்தியா நட்புறவுக்குழுவையும் சந்தித்தனர். அப்போது இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தி வரும் பயங்கரவாத தாக்குதல்கள், அந்த நாட்டின் பயங்கரவாத ஆதரவு உள்ளிட்டவற்றை கனிமொழி எம்.பி. குழுவினர் எடுத்துரைத்தனர்.

மேலும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான வலுவான உறுதிப்பாட்டையும் சுட்டிக்காட்டினர். இது தொடர்பாக கனிமொழி எம்.பி., செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்தியா-கிரீஸ் இடையே ஆழமான, நீண்ட கால உறவு உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் எடுத்துரைத்தோம்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. சபை இந்த விவகாரத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை அவர்கள் புரிந்து கொண்டனர். கிரீஸ் அரசு நம்முடன் நிற்கிறது என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

கனிமொழி எம்.பி. தலைமையிலான பிரதிநிதிகள் குழுவில் குழுவில் ராஜீவ் குமார் (சமாஜ்வாடி), பிரிஜேஷ் சவுதா (பா.ஜனதா), பிரேம்சந்த் குப்தா (ராஷ்டிரீய ஜனதாதளம்) அசோக் மிட்டல் (ஆம் ஆத்மி) ஆகிய எம்.பி.க்களும், நேபாளம்-ஐரோப்பிய ஒன்றியத்துக்கான முன்னாள் இந்திய தூதர் மஞ்சீவ் சிங் புரியும் இடம்பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com