

வாஷிங்டன்,
காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி துணை ராணுவத்தினர் மீது பயங்கரவாதி ஒருவர் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் அரங்கேற்றிய இந்த சம்பவம் உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.
இது தொடர்பாக பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சர்வதேச தலைவர்கள் இரங்கலும் வெளியிட்டனர். இந்த தாக்குதலை அமெரிக்காவும் கண்டித்து இருந்தது.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள தன்னுடைய ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காஷ்மீர் தாக்குதல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் பதிலளிக்கையில், அது (பயங்கரவாத தாக்குதல்) ஒரு பயங்கரமான சம்பவம். அது குறித்த தகவல்களை நாங்கள் பெற்றுக்கொண்டு வருகிறோம். சரியான நேரத்தில் அது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிடுவோம் என்று கூறினார்.
இதைப்போல அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் ராபர்ட் பல்லாடினோ தனியாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரும் காஷ்மீர் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் கண்டனங்களை பதிவு செய்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பயங்கரவாதத்தை அனைத்து வகையிலும் எதிர்ப்பதற்கு இந்திய அரசுடன் இணைந்து உழைக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை அமெரிக்கா பேணி வருகிறது.
எனவே பயங்கரவாத ஒழிப்பில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இத்தகைய பயங்கரவாத எதிர்ப்பு என்பது இருநாட்டு ஒத்துழைப்பு மட்டுமின்றி ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டு ஒத்துழைப்பும் அடங்கியது ஆகும்.
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்கவும், தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படவும் வேண்டும் என பாகிஸ்தானை நாங்கள் அறிவுறுத்துகிறோம். இவ்வாறு ராபர்ட் பல்லாடினோ கூறினார்.
முன்னதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன், வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் உள்ளிட்டோர் காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.