வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு உதவ ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் குழு அமைத்த பிரதமர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு உதவ ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் குழு அமைத்த பிரதமர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூர், எங்கள் வெற்றிக்கு பங்களித்தவர்கள் கேரள மக்கள் எனக் கூறியுள்ளார். #KeralaFloods
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு உதவ ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் குழு அமைத்த பிரதமர்
Published on

துபாய்,

கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி உள்ளன.

இதில் 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. இது தாழ்வான பகுதிகளை சூழ்ந்து வெள்ளக்காடாக்கி இருக்கிறது. இதனால் மொத்த மாநிலமும் பெருங்கடலுக்குள் சிக்கியிருப்பது போன்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. இதைப்போல இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது.

சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் மண் சரிந்தும், வெள்ளம் சூழ்ந்தும் இருப்பதால் மாநிலத்தின் பல பகுதிகளில், குறிப்பாக எர்ணாகுளம், திரிச்சூர் இடையே பஸ், ரெயில் போக்குவரத்து முடங்கி உள்ளது. கொச்சி மெட்ரோ ரெயில் போக்குவரத்திலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கொச்சி விமான நிலையத்தில் தேங்கியுள்ள வெள்ளம் வடியாததால், 26-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மழை, நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி தற்போது வரை 324 பேர் பலியாகியுள்ளனர். கேரள வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த இயற்கை பேரிடரில் சிக்கி தத்தளித்து வரும் மக்களை மீட்பதற்காக முப்படையை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில் ஐக்கிய அரபுகள் அமீரகத்தின் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூர் கேரள வெள்ளத்தினால் உயிரிழந்த மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஐக்கிய அரபுகள் அமீரகள் சார்பில் குழு ஒன்று அமைத்துள்ள பிரதமர் கூறுகையில்,

இந்திய நாட்டிலுள்ள கேரள மாநிலம் கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரங்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்தியாவிலுள்ள நம் சகோதரர்களுக்கு உதவ மறந்து விடாதீர்கள். எங்கள் நாட்டின் வெற்றிக்கு பங்களித்தவர்கள் கேரள மக்கள். இன்னும் பங்களித்து கொண்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும், ஆதரவளிப்பதற்கும் நமக்கு சிறப்பு பொறுப்புள்ளது. மக்களுக்கு உதவ உடனடியாக ஒரு குழுவை நாங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த முயற்சியில் ஒவ்வொருவரும் தாரளமாக பங்களிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com