

துபாய்
பத்திரிக்கையாளரும், சவூதி அரசு குடும்பத்தினரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தவருமான ஜமால் கசோகி துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் வைத்து கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் நடந்து வரும் அக்டோபருடன் ஓராண்டு ஆகும் நிலையில் அமெரிக்க பொது ஒலிபரப்புத் துறை சார்பில் ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில் சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், தனது மேற்பார்வையில் நடந்ததால் கசோகி மரணத்துக்கு தானே பொறுப்பு எனக் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
முதலில் கசோகி கொலையை மறுத்து வந்த சவூதி, பின் தங்கள் நாட்டின் தூதரகத்தில் தான் கொலை நடந்ததாக ஒப்புக்கொண்டது. ஆனால், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தான் அந்தப் படுகொலைக்கு உத்தரவிட்டார் என்பதை மறுத்து வந்தது. இந்நிலையில் முதன்முறையாக பேட்டி ஒன்றில் தானே பொறுப்பு என்று முகமது பின் சல்மான் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.