வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் மூத்த உதவியாளர் சிங்கப்பூர் வருகை

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் மூத்த உதவியாளர் நேற்று இரவு சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் மூத்த உதவியாளர் சிங்கப்பூர் வருகை
Published on

வாஷிங்டன்,

அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவின் நெருக்கடி காரணமாக வடகொரியா பல்வேறு அணு ஆயுத சோதனைகளை தனது நாட்டில் நடத்தி அமெரிக்காவுக்கு பகிரங்கமாக சவால் விட்டது. இதனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்ட கிம் ஜாங் அன், அந்நாட்டின் அதிபர் ஜின்பிங்கை பீஜிங் நகரில் சந்தித்து பேசினார். இதன்பிறகு அவருடைய போக்கில் மாற்றம் ஏற்பட்டது. டிரம்ப்பை சந்தித்து பேசத் தயார் என்று அறிவித்தார். இதை முதலில் ஏற்றுக்கொண்ட டிரம்ப் பின்னர் திடீர் பல்டியடித்து சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் தேதி இருவருக்கும் இடையே நடக்க இருந்த பேச்சுவார்த்தை நடக்காது என்று அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து டிரம்பை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் சந்திக்க தயார் என்று கிம் ஜாங் அன் மேலும் ஒரு படி இறங்கி வந்து அறிவித்தார். இதுகுறித்து தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் கடந்த சனிக்கிழமை வடகொரிய எல்லையில் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசினார். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து டிரம்ப் தனது முடிவை திரும்ப பெறும் விதமாக திட்டமிட்டபடி ஜூன் 12-ந் தேதி சிங்கப்பூரில் வடகொரிய தலைவரை சந்தித்து பேச ஆவலுடன் இருக்கிறேன் என்று மீண்டும் அறிவித்தார். இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகளை தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழலில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் மூத்த உதவியாளர் ஒருவர் நேற்று இரவு சிங்கப்பூர் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தலைவர்களின் சந்திப்புக்கான முன்னேற்பாடுகள் செய்யும் பணிகளுக்காக அதிபரின் உதவியாளர் சென்று இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com