ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நெதர்லாந்து பயணம்; அரச அரண்மனையில் விருந்தளித்து கவுரவித்த மன்னர் அலெக்சாண்டர்

நெதர்லாந்து மன்னர் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நெதர்லாந்துக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நெதர்லாந்து பயணம்; அரச அரண்மனையில் விருந்தளித்து கவுரவித்த மன்னர் அலெக்சாண்டர்
Published on

ஆம்ஸ்டர்டாம்,

நெதர்லாந்து நாட்டின் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நெதர்லாந்துக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார். 1988ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஆர் வெங்கடராமனுக்கு பின்னர், 34 வருடங்களுக்கு பின் இந்திய ஜனாதிபதி நெதர்லாந்து செல்வது இதுவே ஆகும்.

நெதர்லாந்து மன்னர் வில்லெம் அலெக்சாண்டர், நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கும் அவருடைய துணைவியாருக்கும் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள அரச அரண்மனையில் அரசு விருந்து அளித்து கவுரவித்தார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்த அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு நெதர்லாந்து மன்னருக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருந்து உரையில் பேசியதாவது,

எனக்கும், எனது தூதுக்குழுவினருக்கும் கிடைத்த அன்பான வரவேற்பு என்னை மிகவும் பாதித்துள்ளது.

இருநாட்டு தூதரக உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை கூட்டாக கொண்டாடும் இந்த ஆண்டு நமது இருதரப்பு பயணத்தில் ஒரு மைல்கல்லை குறிக்கிறது. இதன்மூலம், இந்தியா-நெதர்லாந்து கூட்டுறவின் ஆழத்தை இது பிரதிபலிக்கிறது.

உங்கள் அழகான நாட்டில், துலிப்ஸ் நிலத்தில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.இது புகழ்பெற்ற ஓவியர்கள், அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களின் பிறப்பிடமாகும். மேலும், நவீன வர்த்தகத்தின் முழுப் பகுதியாக உள்ளது.

கடவுள் உலகைப் படைத்தார், டச்சுக்காரர்கள் நெதர்லாந்தை உருவாக்கினார்கள் என்ற கூற்றுக்கிணங்க, எதிர்கால சவால்களைத் திட்டமிடுவதற்கும் தயார் செய்வதற்கும் டச்சுக்காரர்களின் தனித்துவமான திறன் மிகவும் பாராட்டத்தக்கது.மீட்டன் இஸ் வெட்டன் என்ற உங்கள் பொன்மொழியில் அது பிரதிபலிக்கிறது.

பன்மைத்துவம், உள்ளடக்கம், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவை நமது பொதுவான நெறிமுறையின் ஒரு பகுதியாகும். உலகளாவிய அமைதி, பாதுகாப்பு மற்றும் செழுமைக்காக பணியாற்றுவதற்கான பொதுவான உறுதிப்பாட்டை நாம் பகிர்ந்து கொள்கிறோம்.

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை வலுப்படுத்துவதில் நெதர்லாந்தும் முக்கிய பங்கு வகிக்க முடியும். இணைப்பு, ஆற்றல் மாற்றம், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் நெதர்லாந்து முக்கிய பங்கு வகிக்கும்.

ரவீந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் மற்றும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு டச்சுக்காரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் விருந்தளித்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நெதர்லாந்தின் முன்னணி இந்தியாவை குறித்த ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஹென்ட்ரிக் கெர்ன் டச்சு மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கற்பித்தார். மரியஸ் பாயர் தனது ஓவியங்களில் இந்தியாவின் பதிவுகளை படம்பிடித்தார்.

நெதர்லாந்து நிறுவனங்கள் நீண்ட காலமாக இந்தியாவில் பெயர் பெற்றுள்ளன. 3800 கோடி அமெரிக்க டாலர் முதலீட்டுடன், நெதர்லாந்து தொடர்ந்து இந்தியாவில் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

கொரோனா போன்ற தொற்றுநோய்களின் போது நமது பரஸ்பர ஆதரவு, சுகாதாரத் துறையில் உள்ள ஒருங்கிணைப்பை எடுத்துக்காட்டுகிறது. உலகத்துக்கான தடுப்பூசிகளை உருவாக்குவதற்கும் தயாரிப்பதற்கும் நாம் பங்குதாரராக முடியும் என்பதைக் காட்டியுள்ளது.

ஐரோப்பியாவிலேயேஒரு மிகப்பெரிய இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தோரின் தாயகமாக நெதர்லாந்து திகழ்கிறது. இருநாட்டு கூட்டாண்மையை வலுப்படுத்த தனிப்பட்ட கவனம் செலுத்தியதற்காக டச்சு தலைமைக்கு நான் நன்றி கூறுகிறேன்.

இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது விருந்து உரையில் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com