

கீவ்,
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 52-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைனில் உள்ள ராணுவ தளவடாங்கள் பழுதுபார்க்கும் மையத்தில் இன்று தாக்குதல் நடத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ டெலிகிராம் ஆப் மூலம் முக்கிய தகவல்களை தெரிவித்தார்.
அவர் கூறியிருப்பதாவது:-
மேற்கு உக்ரைனில் உள்ள தலைநகர் கீவ் மீது ரஷியப் படைகள் ஆங்காங்கே தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளன.
தலைநகரின் டார்னிட்ஸ்கி மாவட்டத்தில், சனிக்கிழமை (இன்று) காலை, ரஷியாவின் வான்வழித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் பலர் காயமடைந்தனர்.
எங்கள் வான் பாதுகாப்புப் படைகள் எங்களைப் பாதுகாக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றன.ஆனால் எதிரிகள் நயவஞ்சகமானவர்களாகவும், இரக்கமற்றவர்களாகவும் உள்ளனர்.
உக்ரேனியர்கள் கீவ் நகருக்குள் மீண்டும் வருவதை எங்களால் தடை செய்ய முடியாது, பரிந்துரைக்க மட்டுமே முடியும். நீங்கள் பாதுகாப்பான நகரங்களில் சிறிது காலம் தங்க வாய்ப்பு இருந்தால், அதைச் செய்யுங்கள். இங்கு வராதீர்கள்.
வடகிழக்கு பகுதிகளில் ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதால் அங்குள்ள பூங்காக்கள் மற்றும் காடுகளுக்கு கீவ் நகர குடியிருப்பாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:-
உக்ரைன் தலைநகரில் உள்ள கவச வாகன ஆலையை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல், ரஷியப் படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதிகளை நோக்கி திரும்பிச் சென்ற போதிலும், உக்ரைன் முழுவதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை உக்ரேனியர்களுக்கும் அவர்களின் மேற்கத்திய ஆதரவாளர்களுக்கும் நினைவூட்டும் வகையில் உள்ளது என்று தெரிவித்தது.