

கொழும்பு,
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகை தருகிறார். இன்று மாலை டெல்லி வரும் அவருக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) பிரதமர் மோடியை ராஜபக்சே சந்திக்கிறார்.
பிராந்திய கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் மாலத்தீவு, இலங்கை இந்தியா ஆகிய நாடுகள் இணைந்த முத்தரப்பு கடல் சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஆகியவை பற்றி இருநாட்டு பிரதமர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தனது இந்திய சுற்றுப்பயணத்தின் போது, வாராணசி, சாரநாத் , புத்தகயா, திருப்பதி ஆகிய இடங்களில் உள்ள கோவில்களுக்கு செல்லவும் ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். தனது 4 நாட்கள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பின்னர் 11-ம் தேதி ராஜபக்சே இலங்கை புறப்பட்டுச் செல்கிறார். கடந்த நவம்பரில் இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் ராஜபக்சே இந்தியா வருவது இதுதான் முதல் முறையாகும்.