கடந்த ஆண்டு உலக அளவில் 2.30 கோடி குழந்தைகள் வழக்கமான தடுப்பூசி போடவில்லை - ஆய்வில் தகவல்

உலக அளவில் 2.30 கோடி குழந்தைகள் கடந்த ஆண்டு வழக்கமான தடுப்பூசிகளை போடவில்லை என்பது உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு உலக அளவில் 2.30 கோடி குழந்தைகள் வழக்கமான தடுப்பூசி போடவில்லை - ஆய்வில் தகவல்
Published on

மாஸ்கோ,

சீனாவின் உகானில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதால் அனைத்து நாடுகளும் மிகுந்த நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

கொடூர கொரோனாவால் அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை மேலும் அதிக பாதிப்பை சந்தித்து வருகிறது. கொரோனாவுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறையிலேயே கவனம் செலுத்தியதால் வழக்கமான பிற சேவைகள் உலக அளவில் முடங்கி விட்டன.

இதில் முக்கியமாக, குழந்தைகளுக்கு வழக்கமான தடுப்பூசி பணிகள் மிகுந்த பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. இதன் காரணமாக கடந்த ஆண்டில் (2020) மட்டுமே உலக அளவில் 2.30 கோடி குழந்தைகள் வழக்கமான தடுப்பூசிகளை போடவில்லை. இது முந்தைய 2019-ம் ஆண்டை விட 37 லட்சம் அதிகமாகும்.

அதாவது இந்த குழந்தைகள் தட்டம்மை, டிப்தீரியா மற்றும் டெட்டனஸ் போன்ற தடுப்பூசிகள் போடவில்லை என உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் அமைப்பு நடத்திய கூட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது.

2019-ம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் 30 லட்சத்துக்கு அதிகமான குழந்தைகள் தங்கள் முதல் தட்டம்மை தடுப்பூசியை தவறவிட்டிருக்கின்றனர். 35 லட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் டோஸ் டிப்தீரியா தடுப்பூசியை பெறவில்லை.

இதில் குறிப்பாக 1.7 கோடி குழந்தைகள் எந்தவொரு தடுப்பூசியையும் கடந்த ஆண்டு போடவில்லை. இது சுகாதார சமநிலையை மிகவும் மோசமாக பாதிக்கும் என உலக சுகாதார நிறுவனமும், யுனிசெப் அமைப்பும் கவலை தெரிவித்திருக்கின்றன.

தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகளில்தான் குழந்தைகளுக்கான இந்த வழக்கமான தடுப்பூசி பணிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கொரோனாவுடன் போராடும் சமூகம் மற்றும் சுகாதார அமைப்புகளுக்கு, இந்த தடுப்பூசி போடாததால் ஏற்படும் நோய் தாக்குதல் மேலும் பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ், எனவே குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு முதலீடு செய்வதும், ஒவ்வொரு குழந்தையையும் தடுப்பூசி அடைவதை உறுதி செய்வதும் முன்னெப்போதையும் விட அவசரமானது என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com