தைவானில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்தா? - பொது வாக்கெடுப்பு நடந்தது

தைவானில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து கொடுப்பது தொடர்பாக, பொது வாக்கெடுப்பு நடந்தது.
தைவானில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்தா? - பொது வாக்கெடுப்பு நடந்தது
Published on

தைபே,

ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து தரலாம் என தைவான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. மேலும் இது தொடர்பாக 2 ஆண்டுகளில் நாடாளுமன்றம் சட்ட திருத்தம் செய்ய வேண்டும் அல்லது புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அந்த கோர்ட்டு கூறியது.

இந்த நிலையில், அங்கு நேற்று ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். பொது வாக்கெடுப்பில் 10 கேள்விகளுக்கு பொது மக்களின் கருத்து கேட்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அதில் ஒன்று, ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கலாமா என்பது ஆகும்.ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில், அதற்கு எதிராகத்தான் பெரும்பாலானவர்கள் வாக்களிப்பார்கள் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

ஒரு வேளை ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கி தைவான் சட்டம் இயற்றினால், அவ்வாறு சட்டம் இயற்றிய முதல் ஆசிய நாடு என்ற பெயர், அந்த நாட்டுக்கு கிடைக்கும்.

2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் தைவான் என்ன பெயரில் கலந்து கொள்வது, தைவான் என்ற பெயரில் பங்கேற்பதா அல்லது சைனிஷ் தைபே என்ற பெயரில் கலந்துகொள்வதா என்பதிலும் பொதுமக்களின் கருத்து கோரப்பட்டது. தற்போது தைவான், சைனீஷ் தைபே என்ற பெயரில்தான் கலந்துகொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com