

திரிபோலி,
லிபியா நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு போரில் அதிபர் கடாபி கொல்லப்பட்ட பின்னர் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
எண்ணெய் வளம் மிக்க லிபியாவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் தொடர்ந்து தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், லிபியா நாட்டில் உள்ள திரிபோலி நகர் பகுதியில், வெளியுறவுத்துறை அமைச்சக கட்டிடத்தின் மீது பயங்கரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சக கட்டிடத்தின் வாசலில் ஒரு கார் குண்டு வெடித்தது. வாசலில் இருந்த பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தபோது கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஒரு சூட்கேஸ் குண்டு வெடித்தது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் திரிபோலி நகரில் உள்ள பெட்ரோலிய துறை அமைச்சக அலுவலகத்தின் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து அந்நாட்டின் தேர்தல் ஆணையர் அலுவலத்தின் மீது நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.