இந்தியர்களுக்கு வாழ்நாள் கோல்டன் விசாவா? ஐக்கிய அரபு அமீரகம் மறுப்பு


இந்தியர்களுக்கு வாழ்நாள் கோல்டன் விசாவா?  ஐக்கிய அரபு அமீரகம் மறுப்பு
x
தினத்தந்தி 9 July 2025 8:40 PM IST (Updated: 9 July 2025 8:44 PM IST)
t-max-icont-min-icon

குறிப்பிட்ட நாட்டினருக்கு வாழ்நாள் கோல்டன் விசா வழங்கப்படுவதாக பரவும் தகவல்களை ஐக்கிய அரபு அமீரகம் மறுத்துள்ளது.

அபுதாபி,

வெளிநாடுகளில் உள்ள சில விசா ஏஜென்சிகள் இந்தியா, வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் அமீரகத்தில் தொழில் அல்லது சொத்துக்களில் முதலீடு இல்லாமல் வாழ்நாள் கோல்டன் விசா பெறலாம் என போலியாக விளம்பரம் செய்தன. இதில் 1 லட்சம் திர்ஹாம் ஒருமுறை செலுத்தினால் போதும் என கூறப்பட்டு இருந்தது. இதனை அடுத்து பலரும் இது உண்மையா? என அறிந்துகொள்ள அமீரக மத்திய அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு ஆணையத்தை சமூக ஊடக தளங்களில் தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பினர்.

இதற்கு அந்த ஆணையம் மறுப்பு தெரிவித்து தகவல் வெளியிட்டுள்ளது. அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இதுபோன்ற தகவல்கள் நாட்டுக்கு வெளியே தனியார் ஏஜென்சிகள் போலியாக வெளியிட்டுள்ளன. எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டினருக்கும் வாழ்நாள் கோல்டன் விசா என ஒன்று வழங்கப்படுவது இல்லை. எனவே இந்த தகவல்கள் அமீரக அரசுத்துறைகளின் ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எந்த ஒரு சட்ட வரையறையும் கிடையாது.

அமீரக கோல்டன் விசாவுக்கு பாதுகாக்கப்பட்ட விண்ணப்ப முறை அதிகாரப்பூர்வமான டிஜிட்டல் தளங்களில் மட்டுமே உள்ளது. குறிப்பாக ஆணையத்தின் இணையத்தளம் மற்றும் செல்போன் செயலியில் அணுகலாம். இதுகுறித்து தகவல் அறிய 600522222 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை தொடர்பு கொள்ளுமாறு வெளிநாட்டில் வசிப்பவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அமீரகத்தில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள கட்டமைப்புகள் மற்றும் அளவுகோல்களின்படி மட்டுமே கோல்டன் விசாக்கள் வழங்கப்படுகின்றன. தகுதியான பிரிவுகளில் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், திறனாளர்கள், விஞ்ஞானிகள், நிபுணர்கள், சிறந்த மாணவர்கள், பட்டதாரிகள், மனிதாபிமான முன்னோடி மற்றும் முன்னணி தொழிலதிபர்கள் ஆகியோருக்கு மட்டுமே கோல்டன் விசா வழங்கப்படுகிறது.

எனவே சமூக ஊடகங்கள் மூலமாக பரவும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் அமீரகத்தில் வாழ நினைக்கும் மக்களிடம் பணம் பறித்து வருமானம் ஈட்ட முயற்சி செய்கிறார்கள். இதில் உண்மைத்தன்மையை அறிய அதிகாரப்பூர்வ தளங்களை அணுகி தேவையான தகவல்களை பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story