யானையுடன் எலி மோதுவது போல உள்ளது: 50 சதவீத வரி குறித்து அமெரிக்க நிபுணர் கருத்து


யானையுடன் எலி மோதுவது போல உள்ளது: 50 சதவீத வரி குறித்து அமெரிக்க நிபுணர் கருத்து
x
தினத்தந்தி 29 Aug 2025 9:31 PM IST (Updated: 29 Aug 2025 9:48 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவை அமெரிக்கா அதிகாரம் செய்வது யானையை எலி அதிகாரம் செய்வதைப் போன்றது என்று விமர்சித்துள்ளார்.

உலக நாடுகளுக்கு அதிக வரி விதித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்தார். அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், வர்த்தக வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணிய மாட்டோம். எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் இந்திய விவசாயிகள், சிறு வணிகர்களை பாதிக்க விட மாட்டேன் என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறிவிட்டார்.

அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதை சரிகட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு எடுத்து வருகிறது. அமெரிக்காவின் வரி விதிப்பால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இதற்கிடையே, இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பை அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோல்ஃப் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில்,

"இப்போது உலகில் புதிய அதிகார வரிசை உருவாகியுள்ளது. அதற்கு பிரிக்ஸ் அமைப்பு ஒரு முக்கிய காரணம். உலக பொருளாதாரத்தில் ஜி-7 அமைப்பை பிரிக்ஸ் பின்னுக்குத் தள்ளியுள்ளது. இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் பிரிக்ஸ் அமைப்பில் இருக்கும் மற்ற நாடுகளின் பொருளாதாரம் 35 சதவீதமாக இருக்கிறது. அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்வது உலக அதிகார வரிசை மாறிக் கொண்டிருப்பதற்கு ஒரு அறிகுறியாகும்.

ஐக்கிய நாடுகள் சபையைப் பொறுத்தவரை, இப்போது உலகின் பெரிய நாடு என்றால் அது இந்தியாதான். இந்தியாவை அமெரிக்கா அதிகாரம் செய்வது யானையை எலி அதிகாரம் செய்வதைப் போன்றது. அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு, பிரிக்ஸ் நாடுகளை மேலும் ஒருங்கிணைக்கும். உலக மக்கள் தொகையில் 4.5 சதவீத மக்களை மட்டுமே கொண்ட ஒரு நாடு, மீதமுள்ள 95.5 சதவீத மக்கள் இருக்கும் நாடுகளிடம், நீங்கள் இதைத்தான் செய்ய வேண்டும் என்று கூறக்கூடாது" என்று தெரிவித்தார்.

1 More update

Next Story