

இஸ்லாமாபாத்,
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் பரஸ்பரம் தத்தமது சிறைகளில் வாடும் எதிர்நாட்டு கைதிகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதியும், ஜூலை 1 ஆம் தேதியும் பரிமாறிக் கொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் சிறையில் வாடுகிற 270 மீனவர்கள், 49 சிவிலியன்கள் என 319 இந்தியர்கள் பற்றிய பட்டியலை, அந்த நாட்டின் அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் நேற்று ஒப்படைத்தது.
இதேபோல், இந்திய சிறைகளில் வாடும் 77 மீனவர்கள், 263 சிவிலியன்கள் என 340 பாகிஸ்தானியர் பற்றிய பட்டியலை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் இந்திய அரசு நேற்று வழங்கியது.
இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகள் இடையேயான உறவில் கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளது. அதற்கு மத்தியிலும் ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் பரஸ்பரம் கைதிகள் பட்டியலை பரிமாறிக்கொண்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.