நேரலையின்போது டி.வி. நிலையத்தில் புகுந்து அதிரடி காட்டிய ஆயுத கும்பல்; வைரலான வீடியோ

பிதோ தப்பி சென்ற நிலையில், போலீசார் மற்றும் ஆயுத படைகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர் என அரசு தெரிவித்தது.
நேரலையின்போது டி.வி. நிலையத்தில் புகுந்து அதிரடி காட்டிய ஆயுத கும்பல்; வைரலான வீடியோ
Published on

குயிட்டோ,

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் அச்சுறுத்தலாக உள்ள போதை பொருள் கடத்தல் கும்பல்களில் ஒன்று லாஸ் சோனிராஸ். இதன் தலைவராக அடால்போ மசியாஸ் என்ற பிதோ என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த கும்பல் போதை பொருள் கடத்தலை தொழிலாக செய்து வருகிறது. இதன்படி கொலம்பியா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கடல் வழியே போதை பொருள் கடத்தல் நடைபெறுகிறது.

அதிபர் பதவிக்கு வருவதற்காக போதை பொருள் கடத்தலை ஒழிப்பது பற்றி அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லாவிசென்சியோ என்பவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதனால் அவரை, மசியாஸ் மிரட்டினார் என கடந்த ஜூலையில் பெர்னாண்டோ கூறினார். இந்த நிலையில், பெர்னாண்டோ சுட்டு கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்நிலையில், போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டு, மசியாஸ் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், குவாயாகில் நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து மசியாஸ் தப்பி சென்றார். இதனை தொடர்ந்து அதிபர் டேனியல் நொபோவா நாடு முழுவதும் நெருக்கடி நிலை உத்தரவை பிறப்பித்து உத்தரவிட்டார்.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, ஈகுவடார் நாட்டில் பல்வேறு குண்டுவெடிப்புகள், போலீசார் கடத்தப்படுதல் மற்றும் சிறைகளை தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதிபர் அறிவிப்புக்கு பின்னர், 3 நகரங்களில் இருந்த 7 போலீஸ் ஏஜெண்டுகள் கடத்தப்பட்டு உள்ளனர்.

குயிட்டோ நகருக்கு வெளியே, பொதுமக்கள் நடந்து செல்ல கூடிய பாலம் ஒன்றும் குண்டுவெடிப்புக்கு ஆளானது. சிறைகளுக்குள் 6 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. ரியோபம்பாவில் உள்ள சிறைச்சாலையில் இருந்து, மற்றொரு கும்பலை சேர்ந்த தலைவரான பேப்ரிசியோ கோலன் பிகோ என்பவர் தப்பியுள்ளார். இதனை மேயர் ஜோன் வினியூஜா உறுதிப்படுத்தி உள்ளார். பிகோவுடன் மற்ற சிறை கைதிகள் 38 பேர் தப்பி சென்றனர். அவர்களில் 12 பேர் மீண்டும் பிடிபட்டனர்.

பிதோ தப்பி சென்ற நிலையில், போலீசார் மற்றும் ஆயுத படைகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர் என அரசு தெரிவித்தது.

இந்த சூழலில், அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியான டி.சி. தொலைக்காட்சியில் நேற்று நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. அப்போது, முகமூடி அணிந்தபடி ஆயுதம் ஏந்திய சிலர் கும்பலாக தொலைக்காட்சி நிலையத்திற்குள் அதிரடியாக புகுந்தனர். அவர்கள் பணியில் இருந்தவர்களை சிறை பிடித்தனர். அவர்களை தரையில் அமரும்படி கட்டாயப்படுத்தினர்.

இதனால், ஊழியர்கள் அலறும் சத்தம் மற்றும் துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் நேரலையின் பின்னணியில் கேட்டது. இதன்பின் நேரலை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இதுபற்றிய அதிர்ச்சி தரக்கூடிய வீடியோ ஒன்றும் வெளிவந்து வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com