லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு 2-ம் உலகப்போரில் பயன்படுத்திய வெடிகுண்டு கண்டெடுப்பு

லண்டன் விமான நிலையத்தில் 2-ம் உலகப் போரில் பயன்படுத்திய வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு 2-ம் உலகப்போரில் பயன்படுத்திய வெடிகுண்டு கண்டெடுப்பு
Published on

லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் கிழக்கு பகுதியில் லண்டன் சிட்டி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்துக்கு அருகே உள்ள தேம்ஸ் நதிக் கரையில் ஜார்ஜ் வி டாக் என்கிற இடத்தில் கப்பல் கட்டும் தளம் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு விமான நிலையத்தின் ஓடுபாதைகளை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

இதற்காக ஜார்ஜ் வி டாக் பகுதியை ஒட்டி உள்ள விமான நிலைய ஓடுபாதையில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அங்கு 2-ம் உலகப்போரின்போது பயன்படுத்திய சக்தி வாய்ந்த ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இந்த குண்டு வெடித்தால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் அங்கு உடனடியாக பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது. இதையடுத்து, 214 மீட்டர் தூரத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன.

விமான நிலையம் மூடல்

அதனைதொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக லண்டன் நகர சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் விமான நிலையத்துக்கு வரக்கூடிய சாலைகளும் மூடப்பட்டன.

மேலும் லண்டனில் தரையிறங்கவேண்டிய அத்தனை விமானங்களும் பக்கத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் 16 ஆயிரம் விமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, மற்றும் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டிய பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாயினர்.

மேலும் லண்டன் விமான நிலையத்துக்கும் உல்விச் ஆர்சனல் நகருக்கும் இடையேயான ரெயில் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அப்பகுதியில் குடியிருந்த மக்கள் அனைவரும் தற்காலிகமாக வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். எந்த வாகனங்களும் அப்பகுதி யில் உள்ள சாலைகளில் இயக்க அனுமதிக்கப்படவில்லை.

அப்புறப்படுத்தப்பட்டது

பின்னர் கடற்படை வீரர்கள் அந்த வெடிகுண்டை பத்திரமாக அப்புறப்படுத்தினர்.

இதுபற்றி விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், விமான பயணிகள் மற்றும் விமான நிலையத்தையொட்டி பயணிகளுக்கு ஏற்படும் இடையூறை குறைக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. இதற்கு விமான பயணிகளும், பொதுமக்களும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தனர் என்றார்.

லண்டன் நகரில் லண்டன் சிட்டி விமான நிலையம் உள்பட மொத்தம் 6 விமான நிலையங்கள் உள்ளன என்பதும் இதில் ஹீத்துரு சர்வதேச விமான நிலையம்தான் மிகப்பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com