சிறந்த கிரகத்தை உருவாக்கும் நோக்கில் நடைபெறும் உச்சிமாநாட்டின் நடவடிக்கைகளை எதிர்நோக்குகிறோம் - பிரதமர் மோடி

துபாய் எக்ஸ்போ நகர வளாகத்தில் காப்-28 உலக பருவநிலை உச்சி மாநாடு நேற்று கோலாகலமாக தொடங்கியது.
சிறந்த கிரகத்தை உருவாக்கும் நோக்கில் நடைபெறும் உச்சிமாநாட்டின் நடவடிக்கைகளை எதிர்நோக்குகிறோம் - பிரதமர் மோடி
Published on

துபாய்,

உலக அளவில் பருவநிலை மாறுபாடு சவால்களில் தீர்வுகளை காண்பதற்காக ஆண்டுதோறும் ஐ.நா.வின் சார்பில் உச்சி மாநாடு உறுப்பு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று துபாய் எக்ஸ்போ நகர வளாகத்தில் காப்-28 உலக பருவநிலை உச்சி மாநாடு கோலாகலமாக தொடங்கியது.

இந்த மாநாட்டை அமீரக மந்திரியும், காப்-28 மாநாட்டின் தலைவருமான டாக்டர் சுல்தான் ஜாபர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஐ.நா உச்சி மாநாட்டு வளாகத்தின் நீல மண்டலத்தில் பல்வேறு நாடுகளின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வரிசையில் இந்திய அரங்கை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டுத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இந்த இந்திய அரங்கு திறப்பு விழாவில் மத்திய மந்திரியுடன் அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் துபாயில் தரையிறங்கிய பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், ""காப்-28 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக துபாயில் தரையிறங்கியுள்ளேன். சிறந்த கிரகத்தை உருவாக்கும் நோக்கில் நடைபெறும் உச்சிமாநாட்டின் நடவடிக்கைகளை எதிர்நோக்குகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

தனது மற்றொரு பதிவில், "துபாயில் உள்ள இந்திய சமூகத்தினரின் அன்பான வரவேற்பால் ஆழ்ந்து நெகிழ்ந்தேன். அவர்களின் ஆதரவும் உற்சாகமும் நமது துடிப்பான கலாச்சாரம் மற்றும் வலுவான பிணைப்புகளுக்கு ஒரு சான்றாகும்" என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

இந்த ஐ.நா.வின் உலக பருவநிலை உச்சி மாநாடு வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com