பேஸ்புக்கில் மலர்ந்த காதல்... எல்லைகளை கடந்து பாகிஸ்தான் வாலிபரை கரம்பிடித்த அமெரிக்க பெண்

மிண்டி ராஸ்முஸ்டன் இஸ்லாம் மதத்திற்கு மாறி, தனது பெயரை சுலேகா என்று மாற்றிக் கொண்டார்.
இஸ்லாமாபாத்,
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணம் ஸ்பிரிங்பீல்ட் பகுதியை சேர்ந்தவர் மிண்டி ராஸ்முஸன்(வயது 47). இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த சஜித் செப் கான்(வயது 31) என்பவருக்கும் சுமார் ஒரு ஆண்டுக்கு முன்னர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டது.
இருவரும் பேஸ்புக்கில் பேசி நட்பாக பழகி வந்தனர். பின்னர் வீடியோ கால் மூலம் பேச தொடங்கினர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதையடுத்து நாடு, மதம் உள்ளிட்ட எல்லைகளை கடந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தங்கள் காதல் குறித்து குடும்பத்தினரிடம் கூறி, திருமணத்திற்கு ஒப்புதலையும் பெற்றனர்.
இதன்படி மிண்டி 90 நாட்கள் விசாவில் பாகிஸ்தானுக்கு சென்றார். அவரை இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் சஜித் செப் கான் வரவேற்று தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றார். சஜித் செப் கானின் உறவினர்கள் மிண்டிக்கு பரிசு பொருட்களை வழங்கி இருவரையும் வாழ்த்தினர். இதற்கிடையில், மிண்டி ராஸ்முஸ்டன் இஸ்லாம் மதத்திற்கு மாறி, தனது பெயரை சுலேகா என்று மாற்றிக் கொண்டார்.
பின்னர் சுலேகா மற்றும் சஜித் செப் கானுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இது குறித்து பேசிய சுலேகா என்ற மிண்டி ராஸ்முஸன், பாகிஸ்தான் மிகவும் அழகான, அமைதியான நாடு என்று குறிப்பிட்டார். தனது குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு மகிழ்ச்சியுடன் முழு ஆதரவு அளித்ததாக குறிப்பிட்ட அவர், பாகிஸ்தானின் கலாசாரம், இயற்கை அழகை நேரில் காண அந்நாட்டிற்கு அனைவரும் நேரில் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் சஜித் செப் கான் மிகவும் அன்பான, பணிவான நபர் என்று குறிப்பிட்ட சுலேகா, அவரது அக்கறையும், மரியாதையான நடத்தையும் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்தார். அதே சமயம், இஸ்லாம் மதத்திற்கு மாறியது சுலேகாவின் தனிப்பட்ட முடிவு என்றும், யாரும் அவரை கட்டாயப்படுத்தவில்லை என்றும் சஜித் செப் கான் தெரிவித்துள்ளார்.






