

எச்-1பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினரை “ஒப்பந்த அடிமைகள்” என்று குறிப்பிட்ட விவகாரத்தில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். எனது பேச்சு முறையில் குறைபாடு இருந்திருக்கலாம் என்றும் தென்னிந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த தனது மனைவியின் பெற்றோரை மிகவும் நேசிப்பதாகவும் ஜேடிவான்ஸ் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், கிரீன் கார்டு பெறுவதற்கான நடைமுறையில் முக்கியமான பெர்ம் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதிலிருந்து மைக்ரோசாப்ட், காக்னிசன்ட், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட பல நிறுவனங்களுக்குத் தடை விதித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்க நிறுவனங்கள் தகுதியான உள்நாட்டுப் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய ஜே.டி. வான்ஸ், வெளிநாட்டுப் பணியாளர்களை ஒப்பந்த அடிமைகள் எனக் குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது விளக்கம் அளித்த ஜே.டி. வான்ஸ், அமெரிக்காவுக்கு பங்களிக்க விரும்பும் வெளிநாட்டினரை வரவேற்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் அமெரிக்கப் பணியாளர்களின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது குடும்பத்தின் பின்னணி உங்களுக்குத் தெரியும். தென்னிந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த எனது மாமனார், மாமியாரை நான் நேசிக்கிறேன். அமெரிக்காவில் பிறந்த அவர்களது மகள் தற்போது அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக உள்ளார். அவரைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவரை மிகவும் நேசிக்கிறேன்” என்றார்.
மேலும், தனது பேச்சு முறையில் குறைபாடு இருந்திருக்கலாம் என்று ஒப்புக்கொண்ட அவர், வெளிநாட்டுப் பணியாளர்களைக் குறை கூறுவது தனது நோக்கமல்ல என்றும், அவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் விசா நடைமுறைகள் குறித்தே தனது விமர்சனம் அமைந்திருந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்