ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுங்கள்: டிரம்புக்கு முன்னாள் இளவரசர் வேண்டுகோள்


ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுங்கள்:  டிரம்புக்கு முன்னாள் இளவரசர் வேண்டுகோள்
x

ஈரானிய மக்கள் தெருக்களில் இறங்கி, அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடுங்கள் என முன்னாள் இளவரசர் பஹ்லவி கூறினார்.

பாரீஸ்

ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கிய மக்களின் போராட்டம், 16-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் போராட்டம் பரவியுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

ஈரானின் மறைந்த அரசர் முகமது ரெசா பஹ்லவி. இவருடைய மகன் ரெசா பஹ்லவி (வயது 65). முன்னாள் இளவரசரான பஹ்லவி அந்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள அவர், ஈரானில் நடந்து வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். அவர், மக்கள் தெருக்களில் இறங்கி, அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடுங்கள் என கூறினார்.

இந்த நிலையில், அவர் பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். நீங்கள் அமைதிக்கான மனிதர் என முன்பே ஒரு மரபை உருவாக்கி வைத்து விட்டீர்கள். உங்களுடைய ஆதரவான வார்த்தைகள், விடுதலைக்காக போராடும் வலிமையை ஈரானியர்களுக்கு தந்துள்ளது.

ஒபாமா, பைடன் போன்று நீங்கள் கைவிட்டு விடமாட்டீர்கள் என அவர்களுக்கு தெரியும். இந்த பயங்கரவாத அரசாட்சியின் வீழ்ச்சிக்கு பின்னர், ஈரான் மக்கள் அமைதி, வளத்திற்காக உங்களுடைய சிறந்த நண்பராக மாறுவார்கள். அவர்களை இதில் இருந்து விடுபட உதவி செய்து, ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுங்கள் என கூறினார்.

ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 420 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. அவர்களில் 8 குழந்தைகளும் அடங்குவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2,600 பேர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர். வன்முறையில் ஈடுபடும் அவர்கள் கடவுளின் எதிரிகள் என அரசு கூறியுள்ளது. இதனால் அந்நாட்டு சட்டப்படி, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 More update

Next Story