பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு தீ வைத்த சம்பவம்: மலாலா கடும் கண்டனம்

பாகிஸ்தானில் கில்கிட் பாலிஸ்தான் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் 12 பள்ளிகளை தீயிட்டு கொளுத்தினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மலாலா யூசப்சாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #Malala #GilgitBaltistan
பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு தீ வைத்த சம்பவம்: மலாலா கடும் கண்டனம்
Published on

கில்கிட் பாலிஸ்தான்,

பாகிஸ்தானில் உள்ள பெண்கள் பள்ளிக்கூடங்கள் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. கில்கிட் பாலிஸ்தான் பகுதியில் டயாமர் மாவட்டத்தில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால், 12 பள்ளிக்கூடங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை 12 பள்ளிக்கூடங்கள் எரிக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் வந்து உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட பாதி பள்ளிக்கூடங்கள் மாணவிகள் மட்டுமே படிக்கிற பெண்கள் பள்ளிக்கூடங்கள் ஆகும். பள்ளிக்கூடங்களில் சிலவற்றில் இருந்து பாடப்புத்தகங்கள் வெளியே எடுத்து வரப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டு உள்ளன என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக போலீஸ் படைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. எரிக்கப்பட்ட பள்ளிக்கூடங்களில் இரண்டில் இருந்து வெடிச்சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

பள்ளிக்கூடங்கள் எரிக்கப்பட்டதில் கொந்தளித்துப்போன மக்கள் அந்தப் பகுதியில் அமைந்து உள்ள சித்திக் அக்பர் சவுக்கில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பெண் கல்வி, சமத்துவம் ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து போராடி வரும் மலாலா யூசுப்சாய், பள்ளிகள் எரிக்கப்பட்டது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் பள்ளி மாணவிகளின் புத்தகங்களை வெளியே எறிந்து பயத்தை காட்டியுள்ளனர். நாம் உடனேயே பள்ளிகளை மறுகட்டமைப்பு செய்து மாணவ, மாணவிகளை வகுப்பறைக்கு திரும்ப அனுப்ப வேண்டும். ஒவ்வொரு மாணவ, மாணவியரும் கற்றுக்கொள்ள உரிமையுண்டு என்பதை இந்த உலகிற்கு காட்ட வேண்டும் என தனது டுவிட்டர் வலைத்தளத்தில் மலாலா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com