

மெல்போர்ன்,
ஆஸ்திரேலியவில் மெல்போர்ன் நகரில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு எம்.எச் 128 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
இந்த விமானம் புறப்பட்ட 30 நிமிடத்தில் பயணி ஒருவர் திடீரென எழுந்து தன்னிடம் வெடிகுண்டுகள் இருப்பதாகவும் விமானத்தை வெடிக்க வைக்க போவதாகவும் மிரட்டிய படி விமானி அறைக்குள் நுழைய முற்பட்டார். இதனால் பீதி அடைந்த பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டனர். இதற்கிடையில் , மிரட்டிய நபரை பயணிகளும் சிப்பந்திகளும் இருக்கையில் கட்டி வைத்தனர்.
உரிய அனுமதி கிடைத்ததையடுத்து விமானம் மெல்போர்ன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக இருந்த காவல்துறையினர் மிரட்டிய நபரை பிடித்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது. இதையடுத்து விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் மெல்போர்ன் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியா மற்றும் மலேசிய அதிகாரிகள் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.