மலேசிய பிரதமர் முகைதின் யாசின் இன்று பதவி விலகுகிறார்

மலேசியாவில் கூட்டணி அரசில் ஏற்பட்ட குழப்பத்தால் பிரதமர் மகாதீர் கடந்த ஆண்டு பதவி விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமராக முகைதின் யாசின் பதவி ஏற்றார். இந்த நிலையில், கொரோனா காரணமாக கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையை மன்னரின் ஒப்புதல் இல்லாமலேயே பிரதமர் முகைதின் யாசின் திரும்பப்பெற்றது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மலேசிய பிரதமர் முகைதின் யாசின் இன்று பதவி விலகுகிறார்
Published on

இதை தொடர்ந்து பிரதமர் முகைதின் யாசின் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்து வந்த ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு கூட்டணியிலிருந்து விலகியது. இதனால் பிரதமர் முகைதின் யாசின் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்தது. மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளும் அரசு பெரும்பான்மை இழந்தால் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும். ஆனால் பிரதமர் முகைதின் யாசின் தனது அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் கூறி வந்தார்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் முகைதின் யாசின் இன்று (திங்கட்கிழமை) மன்னரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என பிரதமர் விவகாரத்துறை மந்திரி முஹம்மத் ரிச்சுவான் முஹம்மத் யூசுப் தெரிவித்துள்ளார். இதனால் மலேசிய அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே புதிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com