

கோலாலம்பூர்,
மலேசியாவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தொடர்ந்து 9 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் நஜீப் ரசாக்.
இவர் தனது பதவி காலத்தில் 1 எம்டிபி எனப்படும் மலேசிய மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 4 கோடியே 20 லட்சம் மலேசிய ரிங்கிட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.75 கோடி) தொகையை ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இது தவிர மேலும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நஜீப், கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சுமார் 3 ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணைக்கு பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த வழக்கில் நஜீப்புக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோலாலம்பூர் ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. அதை தொடர்ந்து, இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த நாட்டின் மேல்முறையீட்டு கோர்ட்டில் நஜீப் மனுதாக்கல் செய்தார்.
இந்தநிலையில் இந்த மேல்முறையீட்டு மனு மீது நேற்று விசாரணை நடந்தது. அரசு தரப்பு வக்கீலுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால் காணொலி காட்சி வாயிலாக இந்த விசாரணை நடந்தது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, நஜீப்பின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன் மூலம் நஜீப்பின் 12 ஆண்டுகால சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.