

கோலாலம்பூர்,
மலேசிய விமானம் எம்.எச்.370, கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி, அந்த நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த பெண் சந்திரிகா சர்மா உள்ளிட்ட 227 பயணிகளும், 12 ஊழியர்களும் இருந்தனர்.
இந்த விமானம் புறப்பட்டு சென்ற 30 நிமிடங்களில் ரேடார் திரையில் இருந்து மறைந்தது. அதை தொடர்ந்து அந்த விமானம், மாயமாகிவிட்டது உறுதியானது. ஆனால் என்ன ஆனது என்பது தெரியவில்லை.
இதனை அடுத்து, முதலில் தென் சீனக்கடல் பகுதியில் தேடல் படலம் நடந்தது. ஆனால் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி, அந்த விமானம் தென்திசைக்கு திருப்பப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்ததால், இந்திய பெருங்கடல் பகுதியில் தேடல் வேட்டை நடந்தது. மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து ஏறத்தாழ 3 ஆண்டுகள், இந்தியப் பெருங்கடலில் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு தேடியும், மாயமான அந்த விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த தனியார் கடற்படுகை ஆய்வு நிறுவனமான ஓசியன் இன்பினிட்டி, மாயமான மலேசிய விமானத்தை தேட முன்வந்தது. இதற்காக அந்த நிறுவனத்துடன் மலேசியா கடந்த ஜனவரி மாதம் ஒரு ஒப்பந்தம் போட்டது.
எனினும், இந்த தனியார் நிறுவன தேடுதல் வேட்டைக்கு பின்னரும்கூட மாயமான விமானம், விமானியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததா? அல்லது அவரது கட்டுப்பாட்டை இழந்து கடலில் மோதியதா? என்ற முடிவுக்கு நிபுணர்களால் வர முடியாமல் போய்விட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தனியார் நிறுவனத்தின் விமான தேடுதல் வேட்டை நேற்று முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசிய பிரதமர் மஹதீர் முகமது, மலேசிய விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட முடியாது என்ற முடிவுக்கு அரசு வந்துள்ளது என கூறினார்.
இதுபற்றிய புதிய தகவல் எதுவும் கிடைத்தால் தேடுதல் பணியை மீண்டும் தொடருவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.