

கோலாலம்பூர்,
மலேசிய நாடாளுமன்றத்துக்குக் கடந்த செவ்வாய்கிழமை தேர்தல் நடைபெற்றது. 222 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் 69 சதவீதம் வாக்குப்பதிவு இருந்தது. ஆளும் கட்சியான பிரதமர் நஜீப் ரசாக்கின் பி.என்.கட்சிக்கும், முன்னாள் பிரதமர் மகதிர் முகம்மது தலைமையிலான மலேசிய ஐக்கிய உள்நாட்டுக் கட்சி(எம்யுஐபி) தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது.
வாக்குகள் பதிவானநிலையில், நேற்று எண்ணப்பட்டன. இதில் ஆளும் பி.என். கட்சி தலைமையிலான கூட்டணியை விட மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. 222 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மகதிர் முகமது தலைமையிலான பகாதான் ஹரப்பான் கூட்டணி 121 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஆட்சி அமைக்க 112 இடங்கள் இருத்தலே போதுமானது குறிப்பிடத்தக்கது. ரசாக் தலைமையிலான பிஎன் கட்சி 79 இடங்களில் மட்டுமே வென்றது. சுதந்திரமடைந்து 61 ஆண்டுகளுக்குப் பின், மலேசியாவில் முதன்முறையாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்ற மகதீர் முகம்மது, பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.