

கோலாலம்பூர்,
மலேசியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பிரதமர் தேர்தலில் 92 வயது மஹதீர் முகமது வெற்றி பெற்றார். இதனால் 60 வருடங்களாக இருந்து வந்த ஒரே கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், மலேசிய பிரதமர் மஹதீர் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்பொழுது, நாட்டின் கடன் 1 டிரில்லியன் ரிங்கிட்டாக உள்ளது. இதனை குறைக்க சில திட்டங்களை கலைக்கவோ அல்லது மறுஆய்வு செய்யவோ உள்ளோம். மத்திய அமைச்சர்களின் சம்பளத்தினை குறைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
நாட்டின் தேசிய கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 65 சதவீதம் ஆக உள்ளது. இந்த கடனை குறைக்கும் வழிகளை பற்றி நாங்கள் ஆய்வு செய்ய உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
ஆட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், தேசிய கடனானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 சதவீதம் என தனது ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு கீழ் உள்ளது என முன்பு கூறினார்.