91 வயது முதியவருடைய காரின் குறுக்கே காரை நிறுத்திய நபர்; அதிர்ச்சி காரணம் வெளியீடு

காரில் இருந்த முதியவர் பீட்டர் லடாஸ் மீட்கப்பட்டு, ராயல் அடிலெய்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
91 வயது முதியவருடைய காரின் குறுக்கே காரை நிறுத்திய நபர்; அதிர்ச்சி காரணம் வெளியீடு
Published on: 

அடிலெய்டு

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் ஹாம்ப்ஸ்டெட் சாலையில் வெள்ளை நிற கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அது சீராக செல்லாமல் சாலையின் வலது புறம் மற்றும் இடது புறம் என சென்று கொண்டிருந்தது. இதனால், பின்னால் வந்த வாகன ஓட்டிகள் பலர், தொடர்ந்து பலத்த ஹாரன் சத்தம் எழுப்பியபடி சென்றனர்.

இதனை ஸ்காட் ஹாலண்ட் என்ற வாலிபர் தன்னுடைய வாகனத்தில் வந்தபடி கவனித்து உள்ளார். உடனே அவர், மற்ற வாகனங்களை முந்தி சென்று, காரை நெருங்கினார். அப்போது, காரில் 91 வயது முதியவர், ஓட்டுநர் இருக்கையில் இருந்துள்ளார். அவர் திணறியபடி காரை ஓட்டியுள்ளார்.

விபத்து தவிர்ப்பு

இதனால், பார்த்ததும் நிலைமையை உணர்ந்து கொண்ட ஸ்காட், உடனடியாக அவருடைய காரை, அந்த வெள்ளை நிற காரின் முன்னே கொண்டு சென்று நிறுத்தினார். அந்த வாகனத்தின் பின்புறம் மீது முதியவரின் கார் மோதி நின்றது. இதனால், அடுத்து இரு சாலைகள் பிரிய உள்ள பகுதிக்குள் அந்த கார் நுழையாமல் நின்றது. பெரிய விபத்தும் தவிர்க்கப்பட்டது.

இதன்பின்னர் காரில் இருந்த முதியவர் பீட்டர் லடாஸ் மீட்கப்பட்டு, ராயல் அடிலெய்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவர் குணமடைந்து வருகிறார் என மகள் கூறினார். இதன்பின்னர், அவரை ஸ்காட்டும் நேரில் சந்தித்து உடல்நலம் பற்றி கேட்டறிந்து கொண்டார்.

ஸ்காட்டின் செயலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வெகுவாக பாராட்டினர். அவரை தெற்கு ஆஸ்திரேலிய முதல்-மந்திரி பீட்டர் மலினாஸ்காசும் தனிப்பட்ட முறையில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

X