கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க இறந்து விட்டதாக நாடகமாடி மாட்டிக்கொண்ட நபர்- சுவாரசிய சம்பவம் ..!!

இறந்து விட்டதாக நாடகமாடிய நபர், சற்று நேரத்தில் மாட்டிக்கொண்ட சுவாரசிய சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது.
Image Courtesy: pojok_bogor/Instagram
Image Courtesy: pojok_bogor/Instagram
Published on

ஜகார்த்தா,

கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க தான் இறந்து விட்டதாக நாடகமாடிய நபர், சற்று நேரத்தில் மாட்டிக்கொண்ட சுவாரசிய சம்பவம் ஒன்று இந்தோனேசியாவில் நடந்துள்ளது.

இந்தோனேசியாவின் தெற்கு ஜகார்த்தாவில் உள்ள ஒரு தம்பதி தாங்கள் வாங்கிய கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் ஆம்புலன்ஸ் ஒன்றை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். அதில், தங்களின் இறந்த குடும்ப உறுப்பினர் ஒருவினரின் உடலை கொண்டு செல்ல, தங்கள் வீட்டில் இருந்து இறந்தவரின் வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என கூறியுள்ளனர்.

இதற்காக சவப்பெட்டியுடன் தங்கள் வீட்டிற்கு வருமாறு அந்த தம்பதி தெரிவித்துள்ளனர். அதற்காக அந்த தம்பதி பணமும் செலுத்தியுள்ளனர். பின்னர் தம்பதியின் வீட்டிற்கு அந்த ஆம்புலன்ஸ் வந்துள்ளது. வாகனத்தில் ஏறும் போது தம்பதியினர் நலமாக இருந்ததை ஆம்புலன்ஸ் டிரைவர் கவனித்துள்ளார்.

பின்னர் ஆம்புலன்ஸ் ஒரு நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டு இருந்த போது அந்த தம்பதி சிறிது நேரம் ஆம்புலன்ஸை நிறுத்துமாறு கூறியுள்ளனர். அந்த நேரத்தில் அந்த ஆண் நபர் சவப்பெட்டிக்குள் சென்றுள்ளார். பின்னர் அந்த வாகனம் ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளது.

மருத்துவமனையில் மருத்துவர்கள் முன் சவப்பெட்டிக்குள் இறந்தவர் போல் நடித்து இறப்பு சான்றிதழ் வாங்கி விட தம்பதி திட்டமிட்டு நடித்துள்ளனர். ஆனால் ஒரு கட்டத்தில் சவப்பெட்டியில் இருந்து அந்த நபர் எழுந்து உள்ளார். இதை அவர்களது உறவினர் ஒருவர் எதிர்ச்சியாக வீடியோ எடுத்து உள்ளார்.

அந்த தம்பதியின் திட்டம் குறித்து தெரியாத அந்த உறவினர், இறந்த தனது உறவினர் உயிர்பிழைத்துவிட்டார் என இணையத்தில் அந்த காட்சியை வெளியிட்டு விட்டார். இதனால் அது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

வீடியோ வைரலானதை தொடர்ந்து அந்த நபர் இறக்கவில்லை என அந்த மருத்துவமனை அறிக்கை அளித்துவிட்டது. இதனால் அந்த தம்பதியின் திட்டம் வீணானது. ஆம்புலன்ஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த தம்பதியின் இந்த நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில் அந்த நபர் மற்றும் அவரது மனைவி இருவரும் விசாரிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசிய சட்டத்தின்படி, அதிகாரிகளை வேண்டுமென்றே ஏமாற்ற முயல்வது ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றமாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com