டெஸ்லா வாகனம் மீது சுவஸ்திகா முத்திரை வரைந்த நபர்; முட்டாள் மக்கள் என சாடிய மஸ்க்

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன தயாரிப்பான சைபர்டிரக் மீது ஸ்வஸ்திகா வரைந்த விவகாரம் 3-வது சம்பவம் ஆகும்.
டெஸ்லா வாகனம் மீது சுவஸ்திகா முத்திரை வரைந்த நபர்; முட்டாள் மக்கள் என சாடிய மஸ்க்
Published on

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வாஷிங்டன் அவென்யூ பகுதியில், டெஸ்லாவின் தயாரிப்பான சைபர்டிரக் எனப்படும் மின்சாரத்தில் இயங்கும் வாகனம் ஒன்றை அவி பென் ஹமோ என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவர் சாலையோரம் அந்த டிரக்கை நிறுத்தி விட்டு சென்றிருக்கிறார்.

அப்போது, சுபாரு எனப்படும் ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனத்தின் வாகனத்தில் வந்த மைக்கேல் லூயிஸ் (வயது 42), தன்னுடைய காரில் இருந்து கீழே இறங்கி சென்றார். அந்த டிரக் மீது ஸ்வஸ்திகா அடையாளம் ஒன்றை வரைந்து விட்டு சென்றார். இதனை தூரத்தில் இருந்து கவனித்த அவி, உடனடியாக மைக்கேலின் கார் முன்னே சென்று குறுக்காக நின்று மைக்கேலை காரை விட்டு வெளியே வரும்படி கூறினார்.

ஆனால், காரில் இருந்து மைக்கேல் வெளியே வந்ததும், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, காரை அப்படியே விட்டு விட்டு, மைக்கேல் தப்பி விட்டார். ஒன்றரை மணிநேரம் கழித்து காரை எடுப்பதற்காக திரும்பவும் அந்த பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர். எனினும், மைக்கேலின் வழக்கறிஞர் லூக்காரெள்ளி கூறும்போது, காருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் எந்த தவறும் செய்யவில்லை என கூறியதுடன், அதனால் மைக்கேலின் செயலுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என மறுத்து விட்டார்.

உலக கோடீசுவரர்களில் ஒருவரான எக்ஸ் சமூக ஊடகத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருந்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர், சைபர்டிரக் மீது முட்டை வீசப்பட்டது. மற்றொரு சம்பவத்தில், நாயின் கழிவு சைபர்டிரக் மீது பூசப்பட்டது. இந்நிலையில், ஸ்வஸ்திகா வரைந்த விவகாரம் 3-வது சம்பவம் ஆகும்.

இந்த சம்பவத்திற்கு எலான் மஸ்க், எக்ஸ் சமூக ஊடகத்தில் கண்டன பதிவை வெளியிட்டு உள்ளார். முட்டாள் மக்கள் என தெரிவித்ததுடன், சுபாரு தயாரிப்பு காரை அந்நபர் ஓட்டி வருகிறார், இயற்கையாகவே, அப்படிதான் இருக்கும் என்றும் சுபாரு நிறுவனத்தின் மீதும் தன்னுடைய வெறுப்பை மஸ்க் வெளிப்படுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com