

வாஷிங்டன்,
உலகிலேயே கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்காதான். உலகளவில் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பில் அந்த நாடு தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.இந்த சூழலில் அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. கடந்த சில வாரங்களாக அங்கு வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
அதுமட்டும் இன்றி உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரானும் அங்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அதிகரித்து வரும் தொற்று மற்றும் அதன் காரணமாக மக்கள் அதிக அளவில் தனிமைப்படுத்தப்படுவதன் விளைவாக அமெரிக்காவில் பல தொழில்களுக்கு ஆள் பற்றாகுறை ஏற்பட்டு சிக்கல் எழுந்துள்ளது.
குறிப்பாக விமான நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கணிசமாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்துசெய்ய வேண்டிய சூழல் உருவானது.
இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாக அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளுக்கான கட்டுப்பாடுகளில் அந்த நாட்டு அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.
அதன்படி அறிகுறிகள் ஏதும் இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் தனிமைப்படுத்திக்கொள்வதற்கான காலம் 10 நாட்களில் இருந்து 5 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அவர்கள் இந்த 5 நாட்களுக்கு பிறகு வரும் அடுத்த 5 நாட்களுக்கு கட்டாயம் முக கவசம் அணிந்துகொண்டுதான் பிறர் இருக்கும் இடங்களில் இருக்க வேண்டும் என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் (சிடிசி) அறிவித்துள்ளது.
இதேபோல் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை 14 நாட்களில் இருந்து 5 நாட்களாக குறைத்து சிடிசி உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி சிடிசியின் இயக்குனர் டாக்டர் ருச்செல்லே வெலன்ஸ்கி கூறுகையில் இந்த புதிய விதிகள் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை பாதுகாப்பாக தொடர முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது என கூறினார்.
முன்னதாக கடந்த வாரம் கொரோனா பாதிப்புக்கு ஆளான சுகாதார ஊழியர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை 10 நாட்களில் இருந்து 7 நாட்களாக அமெரிக்க அரசு குறைத்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக பல நாடுகள் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் பிரான்சில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வருகிற 3-ந்தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின் படி வாய்ப்பு உடைய அனைவருக்கும் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல் உள்அரங்குகளில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் 2 ஆயிரத்துக்கும் குறைவான நபர்களே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.