கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Image Courtesy : @MarkJCarney
Image Courtesy : @MarkJCarney
Published on

ஒட்டாவா,

பொருளாதார ரீதியாக கனடா தற்போது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மேலும், அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், கனடா பொருட்களுக்கு வரியை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது கனடா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(வயது 53), தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். லிபரல் கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2015-ம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராக பதவி ஏற்றார். அவர் பதவி விலகியதை தொடர்ந்து, லிபரல் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் 59 வயதான மார்க் கார்னி 1,31,674 வாக்குகள் பெற்று 85.9 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கிறிஸ்டியா பிரீலாண்ட் 11,134 வாக்குகளும், கரீனா கோல்ட் 4,785 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னி, கடந்த 2008 முதல் 2013 வரை கனடா வங்கியின் கவர்னராக பதவி வகித்தார். அதோடு, 2011 முதல் 2018 வரை நிதி நிலைத்தன்மை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சமாளிக்க மிகவும் நம்பகமான அரசியல்வாதியாக கனடா நாட்டு மக்கள் அவரை அங்கீகரிப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மார்க் கார்னி ஒருமுறை டொனால்டு டிரம்ப்பை 'ஹாரி பாட்டர்' கதையில் வரும் வில்லன் கதாபாத்திரமான வோல்டெமார்ட்டுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com