

ஈரானில் கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஈரானைச் சேர்ந்த 25 வயது நபரான அலிரேசா சபாவி என்பவரும், 22 வயது மஹ்வாஷ் கேஷ்வானி என்பவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் அலி ரேசா சபாவிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு அவருக்கு சிறையில் தனது காதலியைத் தொலைபேசி வாயிலாகத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இருவரின் தந்தைகளும் தொலைபேசியில் இணைந்திருக்க, வழக்கறிஞர்களும் சட்ட நடைமுறைகளை நடத்தி வைத்துள்ளனர்.
இந்தச் சட்ட நடைமுறைகள் சில நிமிடங்கள் மட்டுமே நீடித்துள்ளன. இதற்கிடையே, பெண் செயற்பாட்டாளரான மஹ்வாஷ் கேஷ்வானி பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறைத் தண்டனை பெற்று வேறொரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக கடைசி ஆசையை சிறை நிர்வாகம் நிறைவேற்றி கொடுத்து இருப்பது, சோகத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.