

வாஷிங்டன்,
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் அன்னபோலிஸ் என்ற நகரில் 4 அடுக்கு அலுவலக கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு தி கேபிட்டல் கெஸட் என்ற நாளிதழ் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், அலுவலகத்திற்குள் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபரொருவர் திடீரென அங்கிருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் 5 பேர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் கட்டிடத்தில் இருந்தவர்களை வெளியேற்றி உள்ளனர். தொடர்ந்து அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில், நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்த நிலையில்
தாக்குதலில் ஈடுபட்ட அவரது பெயர் ஜரோட் ரமோஸ் (வயது 38) என்று தெரியவந்தது. இவர், சமூக வலைத்தளம் மூலம் பெண் ஒருவருக்கு தொல்லை கொடுத்த விவகாரத்தை கடந்த 2011-ம் ஆண்டு இந்த பத்திரிகை செய்தியாக வெளியிட்டு உள்ளது. இதனால் அந்த பத்திரிகைக்கு எதிராக ரமோஸ் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காததால், ஆத்திரத்தில் இந்த கொலைவெறி தாக்குதலை நிகழ்த்தியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது திட்டமிட்ட தாக்குதல் எனவும் அவர்கள் கூறினர். ஜரோட் ரமோசிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.