

லண்டன்,
இங்கிலாந்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், சுமார் 1,295 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட பூசணிக்காயை வளர்த்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயர் மாகாணம், லிமிங்டன் பகுதியைச் சேர்ந்த விவசாயி இயன் பேடன் (65 வயது). இவர் ‘பாகீரா’ என பெயரிடப்பட்ட மாபெரும் பூசணிக்காய் ஒன்றை தனது பண்ணையில் வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி அன்று இங்கிலாந்தின் பெர்க்ஷையர் பகுதியில் பூசணிக்காய் எடைபோடும் போட்டி நடைபெற்றது. இதில் ‘பாகீரா’ எனப்படும் மாபெரும் பூசணிக்காய் காட்சிப்படுத்தப்பட்டது.
அங்கு கின்னஸ் நடுவர்கள் முன்னிலையில் இந்த பூசணிக்காய் அதிகாரப்பூர்வமாக எடைபோடப்பட்டது. அதில், அந்த பூசணிக்காய் 1,295.8 கிலோ (2,856.8 பவுண்டு) எடை இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பிரிட்டனில் மிக அதிக எடையுள்ள பூசணிக்காயை வளர்த்த புதிய கின்னஸ் உலக சாதனையை இது பெற்றுள்ளது.
இந்த சாதனை குறித்து விவசாயி இயன் பேடன் கூறுகையில், "இந்தப் பூசணிக்காயை வளர்ப்பதற்காக தினமும் 5 முதல் 6 மணி நேரம் வரை பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டேன். இதற்கு நாளொன்றுக்கு சுமார் 130 கேலன் (591 லிட்டர்) தண்ணீர் ஊற்றி வளர்த்தேன்" என்றார்.
முன்னதாக, கடந்த 2025-ம் ஆண்டு தனது இரட்டை சகோதரருடன் இணைந்து 2,819.25 பவுண்டு எடையில் பூசணிக்காய் வளர்த்து இயன் பேடன் சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையையும் இவரே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.