

மொகடிசு,
சோமாலிய நாட்டின் தலைநகர் மொகடிசுவில் இன்று காரில் நிரப்பப்பட்ட வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் பலியானோர் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் பல்கலைக்கழக மாணவர்கள் ஆவார்கள்.
மக்கள் நடமாட்டம் அதிகமான வரித்துறை அலுவலகம் மற்றும் பாதுகாப்பு சோதனைச்சாவடி உள்ள இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
1991ல் இருந்து சோமாலியா நாடு வன்முறை மோதல்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. அல்-கொய்தாவுடன் இணைந்த அல்-ஷபாப் தீவிரவாத இயக்கம் நடத்திய கார் குண்டுகள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களால் தலைநகர் தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது.
அல்-ஷபாப் 2011ல் சோமாலிய தலைநகரிலிருந்து வெளியேற்றப்பட்டது. ஆனால் கிராமப்புறங்களின் சில பகுதிகளை இன்னும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்துள்ளது. அண்டை நாடான கென்யாவிலும் தாக்குதல்களை அல்-ஷபாப் நடத்தியுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அரசியல்வாதிகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதர்கள் தங்கி இருந்த ஓட்டலை முற்றுகையிட்டு 5 பேரை அல்-ஷபாப் கொன்றது.